2012-05-05 14:49:28

கவிதைக் கனவுகளுடன் இணைந்து வரும் ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. எத்தனை நாள்தான் இந்த மரத்திலேயே தங்கி இருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய் போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.
இலை ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது... இலையுதிர் காலத்தின் வடிவில். மரத்திலிருந்து இலை விடுதலை பெற்றது. தன்னை இதுவரைத் தாங்கிவந்த, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லவில்லை அந்த இலை. விடுபட்ட இலை வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி ஒரு சில நொடிகளே நீடித்தது.
உதிர்ந்த இலை இறுதியில் தரையில் விழுந்தது. எப்படி முயன்றாலும் அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தரையோடு வீசிய காற்று புழுதியை அதன் மீது கொட்டியது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.
கண்களில் நீர் பொங்க அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் மற்ற இலைகள் தென்றலில் அசைந்தாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு கவிதையில் சொல்லப்பட்ட உவமை இது. இக்கவிதையை கவிஞர் வைரமுத்து எழுதினார் என்று நினைக்கிறேன். முழுக் கவிதையும் மனப்பாடம் ஆகவில்லை, ஆனால், கவிதையின் இறுதி இரு வரிகள் ஆழ்மனதில் பாடமாகிவிட்டன.
"இயல்பு, இன்பம்.
ஏக்கம், நரகம்."
மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. (யோவான் 15:5)

யோவான் நற்செய்தியில் இயேசு ஏழு முறை தன்னைப் பற்றி "நானே..." என்று கூறியுள்ள வார்த்தைகள் புகழ்பெற்றவை.
வாழ்வு தரும் உணவு நானே - யோவான் 6: 35
உலகின் ஒளி நானே - 8: 12
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை - 10: 9
நல்ல ஆயன் நானே - 10: 12
உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே - 11: 25
வழியும், உண்மையும், வாழ்வும் நானே - 14: 6
உண்மையான திராட்சைச் செடி நானே - 15: 1
என்பவை அற்புதமான 'நானே' வாக்கியங்கள்.

இயேசுவின் இந்த ‘நானே’ வாக்கியங்களைப் பாடல்களாக, மேற்கோள்களாக நாம் பயன்படுத்துகிறோம். இந்த வாக்கியங்கள் பாடல்களாக, மேற்கோள்களாக ஒலிக்கும்போது, மனதில் நிறைவான பல எண்ணங்கள் எழும். தன்னைப் பற்றிய இந்த உருவகங்களை இயேசு எதற்காகக் கூறினார் என்ற சூழலையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இந்த வாக்கியங்கள் இன்னும் கூடுதலான எண்ணங்களை, பாடங்களைச் சொல்லித்தருகின்றன.
"உண்மையான திராட்சைச் செடி நானே" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். "நல்ல ஆயன் நானே" என்று சென்ற வார நற்செய்தியில் இயேசு கூறியதை நாம் கேட்டோம். யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப்பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆராய்ந்தால், அவை எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை உணரலாம்.
"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்ன அந்த வார்த்தைகள், தன் புகழைப் பறைசாற்ற அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும் தன்னால் நன்மைபெற்ற ஒருவர் மற்றவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்தபின் இயேசு சொன்ன வார்த்தைகள் இவை.
பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறான காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர் பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24) அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும் தங்கள் யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (9:34) என்று வாசிக்கிறோம். இந்தச் சூழலில் இயேசு அங்கு வருகிறார். பின் அங்கு நடந்ததை யோவான் இவ்விதம் கூறுகிறார்:
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்என்றார். (யோவான் 9:35-36)
சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட ஒருவருடன் இயேசு ஆரம்பித்த அந்த உரையாடலில், 'நல்ல ஆயன் நானே' என்று அவர் கூறுகிறார். தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்திய தலைவர்களுக்குத் தன்னைப்பற்றிய உண்மையை இடித்துரைக்கவேண்டும் என்பதற்காக இயேசு இதைப் பேசவில்லை, மாறாக, தன்னால் குணம் அடைந்தவர் மீண்டும் பயத்தினால், வெறுப்பினால் பார்வை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால் இயேசு தன்னை ஒரு பாசமுள்ள ஆயன் என்று குறிப்பிடுகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார், இன்றைய நற்செய்தியில். இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. அந்த இறுதி இரவுணவு கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இறுதி இரவுணவில் இயேசு பேசியவை யோவான் நற்செய்தியில் 14,15,16 ஆகிய மூன்று பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. 14ம் பிரிவின் முதல் இறைவார்த்தைகள் இதோ:
யோவான் நற்செய்தி 14: 1
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
சீடர்களின் உள்ளக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? இயேசு அப்போதுதான் அவர்களிடம் இரு பெரும் கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார். பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார். மற்றொரு சீடர், அவர்களுக்குத் தலைவன் என்று கருதப்படும் அந்தச் சீடர், இயேசுவை மறுதலிப்பார். இயேசு கூறிய இரு கசப்பான உண்மைகள் இவை. உண்மைகள் பொதுவாகவே கசக்கும், அதுவும் நம்பிக்கைத் துரோகம் என்ற உண்மை பெரிதும் கசக்கும். நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். இந்த ஒப்புமையின் முக்கியக் காரணம் அந்தச் செடியின் கிளைகளாகத் தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக.
திராட்சைச் செடியையும் கொடிகளையும் பற்றி இயேசு கூறியது சீடர்களின் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிந்திருக்கும். திராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி. திராட்சைக் கனியும், இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம், கரிசனை, கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம். இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால், எத்தனையோ இடர்களை, சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.

திராட்சைத் தோட்டம், திராட்சை இரசம் இரண்டுமே பல சவால்களை நமக்கு முன் நிறுத்துகின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால் எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். (யோவான் 15:2). கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். திராட்சைக் கனிகள் தோன்றுவதற்கு முன் அந்தச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்க வேண்டும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்பட வேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இது மே மாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலைமாற்றம், இடமாற்றம், என்று பல மாற்றங்களை சந்திக்கும் சூழல்கள் எழும் நேரம். பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள்.
பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தர வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். நமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு, கண்காணித்து வளர்ப்பவர். இறைவனுடன் இணைந்து, அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம்.








All the contents on this site are copyrighted ©.