2012-05-05 14:57:11

26 புதிய சுவிஸ் காவல்வீரர்கள் பணியேற்பு


மே 05,2012. 1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது அப்போதைய திருத்தந்தையைக் காப்பாற்றுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து படைவீரர்கள் உயிரிழந்த வீரத்துவச் செயலை நினைவுகூரும் விதமாக, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் 26 புதிய சுவிஸ் காவல் வீரர்களின் பணியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று ஒவ்வோர் ஆண்டும் புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து பணியில் சேருகின்றனர்.
திருத்தந்தை 7ம் கிளமெண்ட் திருப்பீட மாளிகையை விட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தது இந்நாளில் நினைவுகூரப்படுகின்றது.
சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்கள், திருத்தந்தையின் திருப்பயணங்கள், அவர் நிகழ்த்தும் திருவழிபாடுகள், பொதுச் சந்திப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். இன்னும் வத்திக்கான் மாளிகையையும் பாதுகாக்கின்றனர். இந்த சுவிஸ் மெய்க்காப்பாளர்கள், 19 க்கும் 32 வயதுக்கும் உட்பட்ட கத்தோலிக்க இளைஞராக இருக்க வேண்டும். குறைந்தது 5 அடி 9 அங்குலம் உயரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.