2012-05-04 15:22:31

வளர்ந்து வரும் மக்கள்தொகை பிலிப்பீன்சின் பொருளாதாரத்துக்கு உதவுகின்றது என்ற கூற்றுக்கு ஆயர்கள் வரவேற்பு


மே 04,2012. பிலிப்பீன்சில் அதிகரித்து வரும் மக்கள்தொகை அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுவதாய் இருக்கின்றது என்று அந்நாட்டு நிதியமைச்சகச் செயலர் கூறியிருப்பதை வரவேற்றுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.
பிலிப்பீன்ஸ் நிதியமைச்சகச் செயலர் Cesar Purisima இப்புதனன்று தெரிவித்துள்ள இக்கூற்று, மனித வாழ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாய் இருக்கின்றது என்றும், இது நாட்டின் வருங்காலத்துக்கு உதவும் என்றும் அந்நாட்டு ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வு ஆணையத்தின் செயலர் அருள்திரு Melvin Castro கூறினார்.
வேலை செய்யும் வயதுடைய பிலிப்பீன்ஸ் மக்கள், 2015ம் ஆண்டுக்குள், அந்நாட்டுப் பொருளாதாரத்தின் பெரும்பான்மைப் பங்கை வகிப்பார்கள் என்றும் தலத்திருஅவை வட்டாரங்கள் கூறுகின்றன.
2010ம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் மக்கள்தொகை 9 கோடியே 23 இலட்சமாக இருந்தது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் 12 வது இடத்தையும் கொண்டுள்ளது.
பிலிப்பீன்சின் புள்ளி விபர அலுவலகத்தின் விபரங்களின்படி, 1960களில் குறையத் தொடங்கிய மக்கள்தொகை, 2010ம் ஆண்டில் 1.9 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.