2012-05-04 15:28:11

மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை


மே 04,2012. இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு பிரம்படி போன்ற கடுமையான தண்டனை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் ‘உடல்ரீதியான தண்டனை’ எனப்படும் பிரம்படி தண்டனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு தவறு செய்யும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் பிரம்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு 7 மாநிலங்களில் சுமார் ஆறாயிரம் மாணவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நடத்திய ஆய்வில், 99 விழுக்காட்டு மாணவர்கள் பள்ளிகளில் கடுமையான தண்டனையைச் சந்தித்து வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறிய அளவில் காயம் ஏற்படுத்தும் பிரம்படித் தண்டனைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், அந்தத் தவறை மீண்டும் செய்தால் 3 வருட சிறைத் தண்டனை அளிக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது.
இரண்டாவது முறை ஆசிரியர்கள் இதே தவறு செய்யும்போது, பணியில் இருந்து விலக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.