2012-05-04 15:20:11

திருத்தந்தை : மிகக் கொடிய வறுமை அன்பின்மை


மே 04,2012. இவ்வுலகில் பெரும் துன்பங்களுக்கு காரணமாகும் பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
எத்தியோப்பியா, மலேசியா, அயர்லாந்து, ஃபிஜி மற்றும் அர்மேனியா நாடுகளின் திருப்பீடத்துக்கான தூதர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியினால் குடும்பங்களில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை, மனத்தளர்ச்சி, தனிமை போன்றவற்றைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, சமுதாயத்தில் சமூக சமத்துவமின்மை அதிகரிக்காமல் இருப்பதற்கும், மக்களுக்குத் தரமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கும் சாதகமான சட்டங்களுக்கு அரசுகள் உறுதியளிக்குமாறு பரிந்துரைத்தார்.
மனித-சமூக-அரசியல் தளத்தின் அடிப்படையை உறுதிப்படுத்துவதற்கு, ஆன்மீக விழுமியங்களை இழப்பதால் ஏற்படும் துன்பங்களைக் களைவதில் அக்கறை காட்டப்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பல இளையோரின் தேடல், செயற்கைத்தனமான சொர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கின்றது, எதற்கும் அடிமையாதல், நுகர்வுத்தன்மை, பொருளியக் கோட்பாடு ஆகியவை மனித இதயத்தைப் பேரின்ப வாழ்வுக்குக் கொண்டு சேர்ப்பதில்லை என்பதையும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டினார்.
மிகக் கொடிய வறுமை அன்பின்மையே என்றும், பொருளாதார வளங்களை அதிகமாகக் கொண்டிராமல் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்ற கலாச்சார மற்றும் சமயப் பாரம்பரியங்களை ஊக்குவிக்க வேண்டியது நாடுகளின் கடமை என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இறையுணர்வில் வளர்வது மற்றவரைச் சகோதரராக நோக்கச் செய்யும், இது ஏழ்மையை ஒழிப்பதற்கு உதவும் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.