2012-05-04 15:23:40

அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி : நேபாளத்தில் சமய சுதந்திரம் அச்சுறுத்தலில் இருக்கின்றது


மே 04,2012. நேபாளத்தில் முழு சமய சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் எதிர்காலம் அமைக்கப்படுமாறு அனைத்து அரசியல் சக்திகளுக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக அந்நாட்டு அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் அந்தோணி ஷர்மா கூறினார்.
நேபாளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்புக்கான கெடு, இம்மாதம் 27ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் ஷர்மா, இத்தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நேபாளத்தின் ஒவ்வொரு குடிமகனின் மாண்பை மதித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு அந்நாட்டிலுள்ள சுமார் 20 இலட்சம் கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் ஷர்மா, முழு சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒரு காலத்தில் இந்து முடியாட்சி நாடாக இருந்த நேபாளத்தை, இந்து நாடாக அமைப்பதற்கு இன்றும் சில கட்சிகளும் குழுக்களும் முயற்சிக்கின்றன என்றும் அவர் குறை கூறினார்.
நேபாளத்திலுள்ள 32 கத்தோலிக்கப் பள்ளிகளில் 11 ஆயிரம் மாணவியர் உட்பட சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 300 முதல் 500 பேர் வரை புதிதாகத் திருமுழுக்குப் பெறுகின்றனர் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.