2012-05-03 13:37:18

கவிதைக் கனவுகள் .... மலர்க் கண்காட்சி


மலர்க் கண்காட்சி
மனங்களைப் பரவசப்படுத்தும்
மலரடுக்கு மாளிகைகள், கோபுரங்கள்!
மகரந்தங்களை அள்ளிக் கொள்ள
பந்தயம் கட்டி வட்டமடிக்கும் வண்டுகள்!
தேன்சிந்தும் மலர்கள்
சுவாசத்தைத் திணறடிக்கும் மணம் பரப்பும் மலர்கள்
தூர நிற்பவர்களையும் சுண்டியிழுக்கும் காந்தங்கள்
காணும் கண்களுக்கு விருந்தளிக்கும் மணப்பந்தல்
கொத்து கொத்தாய்க் கொட்டிக்கிடக்கும் அழகு
தலையில் சூடிக்கொள்ள மங்கையரைச்
சோதிக்கும் சோதனைக் கூடங்கள்!
அழகுக்கு அர்த்தம் சொல்லும்
அழகுக்குப் பள்ளிக்கூடம் நடத்தும் ஆசான்கள்!
கேள்வி ஒன்று எழுகின்றது....
மலர்களுக்கு வண்ணங்களைத் தீட்டியது யார்?
மலர்களுக்குப் பலவண்ணக் கலவைகள் வந்தது எங்கிருந்து?
மலர்களின் மையங்களில் கொப்பளிக்கும் தேன் வந்தது எங்கிருந்து?
எல்லாம் மொட்டுக்குள்ளிலிருந்து தானே...
சிந்தனைச் சிறகடித்தது நெஞ்சில்....
மகிழ்ச்சி வேண்டும் மலர்ச்சி வேண்டும்
இன்பம் வேண்டும் இனிய பண்பு வேண்டும்
எங்கிருந்து கிடைக்கும் இவையெல்லாம்...
எல்லாம் மனமெனும் மொட்டிலிருந்து ... எல்லாம் உன்னிலிருந்து
மகிழ்ச்சியின் இரகசியமே மனம்தானே!







All the contents on this site are copyrighted ©.