2012-05-03 14:45:15

BAE நிறுவனத்தின் அறநெறிக் கூறுகள் குறித்து Pax Christi கேள்வி


மே,03,2012. போர்க் கருவிகளை உலகின் பல நாடுகளுக்கு வழங்கும் BAE எனப்படும் பிரித்தானிய விண்வெளி நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெறும் வேளையில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறித்து உலக அமைதிக்காக உழைத்து வரும் Pax Christiயும் இன்னும் மற்ற நிறுவனங்களும் கேள்விகள் எழுப்பியுள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளுக்குப் போர்கருவிகளை வழங்கி வரும் BAE நிறுவனம், 1915 கோடியே 40 இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள போர்கருவிகளை 2011ம் ஆண்டு விற்பனை செய்ததாகவும், 158 கோடி பவுண்டுகள் இலாபம் கண்டதாகவும் இப்புதனன்று தன் ஆண்டறிக்கையை வெளியிட்டது.
இந்நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற Pax Christiயின் பொதுச்செயலர் Pat Gaffney, சவுதி அரேபியாவில் நடைபெற்ற போராட்டங்களை அடக்கப் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை BAE நிறுவனம் வழங்கியது குறித்து கேள்விகளை எழுப்பியதாகக் கூறினார்.
மனித உரிமைகள் மதிக்கப்படாத நாடுகளுடன் BAE கொண்டுள்ள தொடர்புகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இக்கூட்டத்தில் தான் வைத்துள்ளதாகவும் Pax Christiயின் பொதுச்செயலர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.