2012-05-01 15:06:46

ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து மிலான் கர்தினால் கவலை


மே01,2012. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டுக்காக மிலான் தலத்திருஅவை உலகெங்கிலுமிருந்து கிறிஸ்தவர்களை வரவேற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நைஜீரியா மற்றும் கென்யாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படும் வருத்தமான செய்திகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன என்ற கவலையை வெளியிட்டார் மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா.
ஞாயிறு திருப்பலியில் விசுவாசிகள் பக்தியுடன் கலந்து கொண்ட போது இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய கர்தினால் ஸ்கோலா, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆப்ரிக்காவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் இடம் பெறுகின்றன என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டித்தனமாய்க் கொல்லப்படுவது மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாராமுகம் மற்றும் புறக்கணிப்பு குறித்து மிலான் தலத்திருஅவை கவலை அடைந்துள்ளது என்றும் கர்தினால் கூறினார்.
இத்தாலிய யூதமத அவையும் மிலான் கர்தினாலுடன் இணைந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இம்மாதம் 30ம் தேதி மிலானில் தொடங்கும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் திருத்தந்தையும் கலந்து கொள்வார்.
நைஜீரியாவில் இஞ்ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.