2012-04-30 16:12:09

வாரம் ஓர் அலசல் – இலட்சியப் பயணம்


ஏப்ரல்30,2012. அந்த நாட்டு அரசிக்குத் திடீரெனப் பயங்கர வயிற்றுவலி. வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார். அரண்மனை மருத்துவர் வந்தார். அரசி குணமடைவதற்கு மருந்தும் சொன்னார். “சிரஞ்சீவி மலையுச்சியில் ஒரு பச்சையிலை இருக்கிறது. அதன் சாறே வலிக்குச் சரியான மருந்து. அது கிடைக்காவிட்டால் அரசி பிழைப்பது கஷ்டம்”. மருத்துவர் சொன்ன இந்த மருத்துவத்தைக் கேட்டுப் பதறிப் போன அரசர், மூன்று இளவரசர்களையும் அழைத்து, “உடனடியாகப் புறப்படுங்கள். மூலிகையோடு வந்து சேருங்கள்” என்று ஆணையிட்டார். தந்தை சொல்லி வாய் மூடு முன்னரே புறப்பட்டார் இளையவர். மூத்த இரண்டு பேரும் இணைந்தே கிளம்பினார்கள். மலையடிவாரத்தை அடையு முன்னரே, “இதுதான் வழி, அதுதான் வழி” என்று தங்களுக்கிடையே வாக்குவாதம் செய்து கொண்டே பயணம் செய்தார்கள். அதனால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமலும் முக்கித் தவித்தனர். முத்தாக மூன்று நாள்கள் முடிந்தும் இவர்கள் இருவரும் மலையடிவாரத்தை அடையவில்லை. ஆனால், அதற்குள் இளையவர் மூலிகையோடு அரண்மனை திரும்பினார். அரசியும் காப்பாற்றப்பட்டார். வெறுங்கையோடு திரும்பின அந்த இரண்டு மூத்தவர்களும் இளையவரிடம், “உனக்கு மட்டும் எப்படி வழி தெரிந்தது? கடினமாக இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இளையவர், “இதில் என்ன கடினம்? மலையடிவாரத்துக்குப் போனால் மலைப்பாதைத் தானாய்த் தெரிகிறது” என்று மிக நிதானமாகப் பதில் சொன்னார். உண்மைதான். ஒன்றைப் பெற வேண்டுமென்ற இலக்குடன் பயணிப்பவர்கள் நிச்சயம் அதை அடைந்தே தீருவார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷேக் முகமது அலி என்பவர் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறித்து இச்சனிக்கிழமையன்று (ஏப்.28) செய்தி வெளியாகி இருந்தது. பள்ளிகளில் 74 விழுக்காட்டு மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு தெரிவித்திருப்பதாக ஷேக் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 7,379 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர், தென்னிந்தியாவில் மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இளம் வயதினரின் தற்கொலை நிகழ்கின்றது என அந்த ஆய்வு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்பு நேயர்களே, மாணவ மாணவியரின் தற்கொலை பற்றிய செய்திகளை வாசிக்கின்ற போது, இவர்களின் இலட்சியப் பயணங்கள் எங்கே என்ற கேள்வி எழும்புகிறது. எதிர்காலத்தைப் பற்றிய பல கனவுகளோடு கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் இவர்களின் இலட்சியக் கனவு இடையிலே கருகிப் போனது ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
இன்றைக்கு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தொடங்கி I.I.T யில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாகத் தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். 2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவர் மணிவண்ணன், மாணவி தைரியலட்சுமி, பனப்பாக்கம் சாம் பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடேஷ்... என்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வறுமையின் பிடியில் வளர்ந்த தைரியலட்சுமி, 10ம் வகுப்புத் தேர்வில் 465 மதிப்பெண்களும், மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1012 மதிப்பெண்களும் பெற்றவர். இவ்வளவு திறமைமிக்க தைரியலட்சுமி, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து இரண்டு செமஸ்டர்கள்கூட முடியாத நிலையில், தேர்வுத் தோல்விப் பயத்தில் தூக்கில் தொங்கி விட்டார். இவ்வாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெற மாட்டேன் என்ற பயத்தில் சென்னையைச் சேர்ந்த 17 வயது வினோதினி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த 2012ம் ஆண்டில் மட்டும் சராசரியாக வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டில் 50 மாணவிகள் உட்பட 84 மாணவர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளிலிருந்தும் இது மாதிரியான செய்திகள் வெளிவருகின்றன. ஆப்ரிக்க நாடான கென்யாவில், மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதி பெறுவதற்கானத் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் வாசித்தோம். தேர்வுத் தோல்வியாலும், காதல் தோல்வியாலும், ஆசிரியர்களின் அவமானச் சொற்களைத் தாங்க முடியாமலும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.
வாழ வேண்டும் என்பதற்குப் பத்து காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்ற ஒற்றை முடிவைத்தான் மனம் எளிதில் நோக்குகிறது. எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சிக்காத குறுகிய பார்வை, இரட்டை மனநிலை, நொடிப்பொழுது முடிவு, எதார்த்தங்களைச் சந்திப்பதற்குத் துணிவு இல்லாமை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அனுபவம் மிக்க பெரியோர்களின் அறிவுரையை நாடாமை..... இப்படி பல காரணங்களைச் சொல்லலாம். கைகளும் கால்களும் இல்லாமல் அல்லது ஒரு கை, ஒரு காலுடன் வரலாறு படைக்கின்றவர்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் வத்திக்கான் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு சக்கர நாற்காலியில் ஒரு முதுகலைப் பட்டதாரி தமிழ்ப் பெண் வந்திருந்தார். இந்த மாற்றுத் திறனாளியால் பிறர் உதவியின்றி சிறிது தூரம்கூட நடக்க முடியாது. ஆயினும் இவர் தன்னைப் போன்ற, பெற்றோரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறாருக்குமென சென்னையிலுள்ள ஒரு கருணை இல்லத்தில் இயக்குனராக இருக்கிறார். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் கலக்கமும் குழப்பமும் ஏற்படும் போது, தன்னைவிட இன்னும் அதிகமாய்த் துன்புறுவோர் பற்றி நினைத்துப் பார்த்து வாழ்க்கையில் முன்னோக்கி நடக்கலாம்.
கணணித் தொழில்நுட்பம் மற்றும் கணணித் தகவல் தொடர்புத் துறைகளில் பெண்களும் சிறுமிகளும் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், நியுயார்க் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் “Girls in ICT Day” என்ற நிகழ்ச்சி கடந்த வாரத்தில் நடத்தப்பட்டது. ITU என்ற அனைத்துலகத் தொலைத்தொடர்பு கழகத்தின் முயற்சியால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் Joanne O’Riordan என்ற அயர்லாந்து நாட்டுச் சிறுமி கலந்து கொண்டார். இந்த 16 வயது சிறுமிக்கு Tetra-amelia syndrome என்ற நோய்ப் பாதிப்பு. அதாவது Joanne பிறந்த போதே இரண்டு கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்தவர். சக்கர நாற்காலியில் இருப்பது உட்பட தனது வாழ்வின் அனைத்துச் செயல்களுக்கும் பல்வேறு விதமான தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்தும் விதம் குறித்து ஐ.நா.நிகழ்ச்சியில் விளக்கியிருக்கிறார் Joanne.
RealAudioMP3 இதேபோல், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்த நிக் வியூஜிசிச்(Nick Vujicic) பற்றி நாம் முன்பு ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தோம். இவர் ஒரு கூட்டத்தில் பேசிய போது,
RealAudioMP3 இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்தத் துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன்.
Nick Vujicic மேலும் சொல்கிறார RealAudioMP3 ் - ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது. பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை, வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரக் காலணிகள். அவற்றைப் பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்! உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்று நம்புங்கள். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் சாதிக்கப் பிறந்தவர்தான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் உங்களாலும் முடியும்! இன்றே, இப்பொழுதே புறப்படுங்கள்! இதோ களம் காத்திருக்கிறது!
எனவே இளம் மாணவ மாணவியரே, இந்த வார்த்தைகள் உங்களது இலட்சியப் பயணங்களுக்கு ஊக்கம் தரட்டும். வாழ்வு இறைவன் கொடுத்த கொடை. அதை வாழ்நது காட்டுவது நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கை. உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் தோழர்களே, உழைப்பில் நெருக்கடிகள், ஏமாற்றங்கள், சோர்வுகள் இடர்படும் போது எதிர்மறையான செயல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மனித வாழ்வின் மாண்பை உணர்ந்து மதித்து உங்களது இலட்சியத்தை அடைவதற்குப் பயணத்தைத் தொடருங்கள்.







All the contents on this site are copyrighted ©.