2012-04-30 15:34:06

மியான்மாரில் மக்களை மையப்படுத்திய மாற்றங்களை அரசுத் தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


ஏப்ரல்,30,2012. மாற்றங்களைத் துவக்கியிருக்கும் மியான்மாரில் மக்களை மையப்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்து சிந்திக்க அரசுத் தலைவர் Thein Seinம், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiம் இணைந்து உழைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
எதிர்கட்சியினர் முதன்முறையாகப் பங்கேற்கும் மியான்மார் பாராளுமன்றக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பான் கி மூன், இராணுவ அரசின் தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் மியான்மார் அரசியலில் கொண்டுவந்துள்ள முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.
2009ம் ஆண்டு பான் கி மூன் மியான்மாருக்குப் பயணம் மேற்கொண்டபோது, அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த Suu Kyiயைச் சந்திக்க முடியாமல் திரும்ப வேண்டியிருந்தது.
இவ்விரு தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மியான்மாரில் பல நிலைகளிலும் ஒப்புரவு வளர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் தன் உரையில் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய வாக்குறுதியில் இருந்த வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று Suu Kyi விடுத்திருந்த நிபந்தனைக்குத் தகுந்ததுபோல் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், Suu Kyi உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் விரைவில் வாக்குறுதி எடுத்து கலந்து கொள்வர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.