2012-04-28 14:59:09

லைபீரிய ஆயர் : Charles Taylorக்கு எதிரான தீர்ப்பு எல்லாருக்கும் ஒரு செய்தியை முன்வைக்கிறது


ஏப்ரல்28,2012. ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அரசுத் தலைவர் Charles Taylor மனித சமுதாயத்திற்கு எதிராகச் செய்த குற்றங்கள் மற்றும் சியெரா லியோன் உள்நாட்டுப் போரின் போது செய்த போர்க் குற்றங்கள் தொடர்பாக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஐ.நாவும் அந்நாட்டு ஆயர்களும் வரவேற்றுள்ளனர்.
Charles Taylor குறித்த 11 போர்க் குற்றங்கள் மற்றும் சிறார் படைவீரர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியது, கூட்டுத் தண்டனைகள், கட்டாயத் திருமணங்களுக்காக அடிமைகளை வைத்திருந்தது, போர்க்காலச் சூறையாடல் உட்பட மனித சமுதாயத்திற்கு எதிராகச் செய்த குற்றங்கள் குறித்து சியெரா லியோன் நாட்டுக்கான ஐ.நா.ஆதரவு பெற்ற சிறப்பு நீதிமன்றம், ஹாலந்தில் விசாரித்து இவ்வியாழனன்று தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த Cape Palmas ஆயர் Andrew Karnley, இது எவ்வித வேறுபாடுமின்றி, லைபீரிய நாட்டவர்க்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஒரு தெளிவான செய்தியை வழங்குகிறது என்று தெரிவித்தார்.
2006ம் ஆண்டில் சியெரா லியோன் நாட்டில் தொடங்கிய இவ்விசாரணை, பாதுகாப்பு காரணமாக ஹாலந்து நாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சார்லஸ் டெய்லர், லைபீரியாவில் சட்டத்துக்குப் புறம்பே வைரங்களையும் மரங்களையும் வெட்டி சியெரா லியோனின் உள்நாட்டுப் போருக்கு உதவி செய்தவர். மேலும், லைபீரியாவில் 1999ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக சண்டை தொடங்கக் காரணமானவர். அச்சண்டையில் பல குருக்களும் துறவிகளும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் லைபீரியாவில் இடம் பெற்ர இரண்டு உள்நாட்டுப் போர்களிலும் சுமார் 2,50,000 பேர் இறந்தனர் என்றும் ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.