2012-04-28 14:58:07

திருப்பீடச் செயலர் : பொதுநிலைக் கிறிஸ்தவர்கள் Giuseppe Tonioloவிடமிருந்து பாடம் கற்க வேண்டும்


ஏப்ரல்28,2012. பன்மைத்தன்மை போக்கை எதிர்கொள்வதும் உண்மையான உரையாடலும், நீதி மற்றும் அமைதி வளர்வதற்கான கூறுகளாக அமைகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
இந்தக் கூறுகள் வேற்றுமைகளை அகற்றுவதில்லை, மாறாக, உரையாடலை ஆழப்படுத்துகின்றன என்று, Giuseppe Toniolo பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
இத்தாலிய சமூகநல வாரங்களை உருவாக்கியவரும், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு முன்னோடியாகக் கருதப்படுபவருமான Giuseppe Toniolo, இஞ்ஞாயிறன்று உரோம் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியில் அருளாளர் என அறிவிக்கப்படவிருக்கிறார்.
இந்நிகழ்வை முன்னிட்டு இவ்வெள்ளியன்று “Giuseppe Toniolo வின் பள்ளியில்” என்ற சுலோகத்துடன் உரோமில் தொடங்கிய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு அனுப்பிய செய்தியில், திருஅவையில் பன்மைத்தன்மை இருந்தாலும், மறைப்பணி ஒன்றே என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத் துறையின் பேரருட்திரு Peter Wells இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு திருப்பீடச் செயலரின் செய்தியையும் வழங்கினார். இத்தாலியின் மாபெரும் பொருளியல் மற்றும் சமூகவியல் வல்லுனர் எனப் போற்றப்படும் Giuseppe Toniolo, ஒரு நடுத்தரக் குடும்பத்தில் Treviso வில் பிறந்தார். 1883ம் ஆண்டில் Pisa பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த இவர், 1918ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதாரத் துறையின் தலைவராக இருந்தார்.







All the contents on this site are copyrighted ©.