2012-04-26 15:06:55

மனிதகுல நன்மைக்கு ஒன்றிணைந்து உழைக்க இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஒப்பந்தம்


ஏப்ரல்,26,2012. மனிதகுலத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து உழைப்பது குறித்த புரிதல் ஒப்பந்தத்தில் இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய இஸ்லாமியக் குழுவும் இத்தாலியின் கத்தோலிக்கப் பிறரன்புக் குழு சான் எஜிதியோவும் கையெழுத்திட்டுள்ளன.
அறியாமை மற்றும் ஏழ்மை எனும் சுமைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும் இவ்விரு குழுக்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வந்திருப்பது நல்லதொரு முன்மாதிரிகை என்றார் Muhammadiyah என்ற இந்த இஸ்லாமிய குழுவின் தலைவர் Din Syamsuddin.
இத்தகைய ஒத்துழைப்பு என்பது சமூகப்பணிகளை மட்டுமல்ல, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை ஊக்குவிப்பதையும் தன்னுள் கொண்டுள்ளது என்றார் அவர்.
வன்முறையற்ற ஓர் உலகைக் கட்டியெழுப்புவதை நோக்கம் கொண்டதாக, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களின் ஒன்றிணைந்த பணி இருக்கும் என மேலும் கூறினார் Din Syamsuddin.
பல்வேறு மதப்பின்னணியைக் கொண்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழும் இந்தோனேசியாவில், ஏழ்மையை அகற்றவும் அமைதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவித்தார் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் அதிகாரி Marco Impagliazzo.








All the contents on this site are copyrighted ©.