2012-04-26 15:06:38

செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை லெபனான் நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்


ஏப்ரல்,26,2012. லெபனான் நாட்டு மக்கள் திருத்தந்தையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் என்றும் செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை அவர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர் என்றும் இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்து வரும் அருள்தந்தை Marwan Tabet கூறினார்.
வருகிற செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் இத்திருப்பயணத்தை வத்திக்கான் அதிகாரிகளுடன் இணைந்து திட்டமிட்டு வரும் அருள்தந்தை Tabet, வத்திக்கான் வானொலிக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே திருத்தந்தையின் பயணம் குறித்து லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் எதிர்பார்த்து வந்தாலும், உயிர்ப்புத் திருநாளன்று திருத்தந்தையின் திருப்பயணத்திற்கான திட்டவட்டமான தேதிகள் வெளியானதும், அனைவரும் இச்செய்தியினை ஆர்வமாய் வரவேற்றனர் என்று அருள்தந்தை Tabet எடுத்துரைத்தார்.
லெபனான் நாட்டுத் தலைவர்கள் மட்டுமல்லாமல், மத்திய கிழக்குப் பகுதியின் பல நாடுகளிலிருந்தும், வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் திருத்தந்தையின் பயணத்தின்போது லெபனான் நாட்டுக்கு வருகை தர உள்ளனர் என்று அருள்தந்தை Tabet கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில், முக்கியமாக சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளைப் பற்றி தொடர்ந்து அறிந்து வரும் திருத்தந்தை, இப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு செபிக்குமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருவது, இப்பகுதியின் மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது என்று அருள்தந்தை Tabet தன் பேட்டியில் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.