2012-04-26 15:05:59

சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை


ஏப்ரல்,26,2012. சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கானத் திருப்பீட அவை இவ்வாரம் மேற்கொண்ட நிறையமர்வுக் கூட்டத்தில் சீனக் கத்தோலிக்க விசுவாசிகளுக்கான பயிற்சிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.
இவ்வாரம் திங்கள் முதல் புதன் வரை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், சீனக் கத்தோலிக்கர்கள், தாங்களும் திருஅவையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து செயல்பட தேவையான பயிற்சியை வழங்குதல் என்பது முதல் கருத்தாக விவாதிக்கப்பட்டது.
இரண்டாவதாக, சமூகக் குடிமக்கள் என்ற முறையில் சீனக் கத்தோலிக்கர்கள் வாழ்வையும் குடும்பத்தையும் அன்பு கூர்பவர்களாகவும், சீனக்கலாச்சார மதிப்பீடுகளை ஊக்குவிப்பவர்களாகவும், தங்கள் நாட்டை அன்புகூர்ந்து வாழ்பவர்களாகவும் செயல்பட ஊக்கமளித்தல் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
மூன்றாவதாக, விசுவாசிகள் இறைவனின் கொடைகளைப் பெற்று, பங்குத்தள அளவில் உயிர்த் துடிப்புடைய உறுப்பினர்களாகச் செயல்பட உதவ வேண்டியது அவசியம் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது.
இம்மூன்று முக்கிய கூறுகள் தவிர, வயது வந்தோர் திருமுழுக்கு பெறுவதற்குத் தயாரித்தல், தங்கள் மேய்ப்புப்பணிகளை ஆற்றமுடியாமல் சிறைத்தண்டனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளும் ஆயர்கள் மற்றும் குருக்களுடன் ஒருமைப்பாடு, திருத்தந்தையின் அனுமதியின்றி ஆயர் மற்றும் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றுள்ளவர்கள் நிலை, அண்மைக்காலங்களில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கைக் குறைந்து வருதல், வரும் மே 24ம் தேதி சீனத் திருஅவைக்கான செப நாள் சிறப்பிக்கப்படல் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.