2012-04-26 15:06:11

சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது - திருப்பீட அதிகாரி


ஏப்ரல்,26,2012. உண்மையான பொருளாதார முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும் வெறும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் உருவாக்கப்படுவதில் பொருள் இல்லை என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் கத்தார் தலைநகர் Dohaவில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அமைப்பின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
2000மாம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே சரிவை நோக்கிச் சென்ற உலகப் பொருளாதாரம், 2008ம் ஆண்டு நெருக்கடியான நிலையைச் சந்தித்தது என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இந்த நெருக்கடியால் 3 கோடி மக்கள் வேலைகளை முற்றிலும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும், பல நாடுகளின் அரசியல், கலாச்சார நிலைகள் மாறியதும் நமக்கு பல உண்மைகளை உணர்த்தியது என்று கூறினார்.
இப்பொருளாதாரச் சரிவுக்கு அடிப்படை காரணம் வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல, மாறாக, இது ஒரு நன்னெறி கோட்பாடுகளின் நெருக்கடி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய Caritas in Veritate என்ற சுற்று மடலில் எழுதியுள்ளதை தன் உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர் தொமாசி.
சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றும் வழிகளைத் தீர ஆய்வு செய்வதன் மூலம், நிலையான நீடித்த முன்னேற்றத்தை மனித சமுதாயம் காணமுடியும் என்பதையும், இந்த முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது என்று திருப்பீட அதிகாரி தன் உரையில் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.