2012-04-25 14:49:42

மியான்மார் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் ஆர்வத்தில் எடுக்கப்பட்டது - மியான்மார் அரசியல் தலைவர்


ஏப்ரல்25,2012. மியான்மார் நாட்டின் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் மற்றும் பொருளாதார ஆர்வத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று மியான்மார் அரசியல் தலைவர் ஒருவர் கூறினார்.
1990ம் ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற தேர்தலில் NLD (National League for Democracy) எனப்படும் தேசியக் குடியரசு கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற Tint Swe என்ற அரசியல் தலைவர், அங்கு உருவான இராணுவ ஆட்சியின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் Luxembourgல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மியான்மாரின் தடைகளை நீக்கும் முடிவை இச்செவ்வாயன்று எடுத்ததைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்ட Tint Swe, மியான்மாரில் உருவாகிவரும் வரவேற்கத்தக்க மாற்றங்களையும் குறித்து பேசினார்.
இயற்கை வளங்கள் அதிகம் உள்ள மியான்மாரில் மக்கள் இன்னும் பெருமளவு வறுமையில் இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஓர் உண்மை என்று Tint Swe தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
இச்செவ்வாயன்று மியான்மாரில் நடைபெற்ற பாராளு மன்றக் கூட்டத்தில் Aung San Suu Kyiயின் தலைமையில் அண்மைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவ அரசு ஏற்காததால், Suu Kyiயும் அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் பாராளு மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.