2012-04-25 14:47:03

சூடான் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குச் சமயக் காழ்ப்புணர்வு காரணம் – விமர்சகர்கள் கருத்து


ஏப்ரல்25,2012. சூடானில் அண்மையில் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னணியில் சமயக் காழ்ப்புணர்வு இருப்பது தெரிவதாக, சர்வதேச மத சுதந்திரம் குறித்த வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சூடானில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வரும் சண்டையில் மத உள்நோக்கம் இருப்பதைச் சர்வதேச ஊடகங்கள் பார்க்கத் தவறியுள்ளன என்று வாஷிங்டன் மத சுதந்திரத்திற்கான ஹட்சன் நிறுவன இயக்குனர் Nina Shea கூறினார்.
அண்மை ஆண்டுகளில் எகிப்து, ஈராக், நைஜீரியா உட்பட பல நாடுகளில் ஆலயங்களில் தொடர்ந்து குண்டு வைப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் Shea சுட்டிக் காட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்று Khartoumல் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கத்தோலிக்க ஆலயத்துக்குத் தீ வைத்தனர் என்றும், இவ்வாலயத்தில் பல கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சூடானில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட தென் சூடானியர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.