2012-04-24 15:45:24

தட்டம்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் யுக்திகள் அவற்றின் இலக்கை அடையவில்லை – லான்செட் இதழ்


ஏப்ரல்,24,2012. தட்டம்மையால் ஏற்படும் இறப்புக்களை குறைப்பதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி வேகமாக முன்னேறவில்லை என்று பிரிட்டன் மருத்துவ இதழ் Lancet அறிவித்தது.
Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2000 மாம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தட்டம்மை நோய் இறப்புக்களை 90 விழுக்காடு குறைப்பதாய்த் திட்டமிடப்பட்டிருந்தது, ஆயினும், இவற்றில் 74 விழுக்காட்டு இறப்புக்களையே தடுக்க முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.
ஆப்ரிக்காவில் இந்நோய் பரவி வருவதும், இந்தியாவில் இந்நோய்க்குத் தடுப்பூசி போடும் திட்டங்கள் தாமதம் அடைவதும் இந்நிலைக்குக் காரணம் என்றும் அவ்விதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
தட்டம்மையால் இரண்டாயிரமாம் ஆண்டில் 5,35,300 பேரும், 2010ம் ஆண்டில் 1,39,300 பேரும் இறந்தனர் என்றும் கூறும் அவ்விதழ், இவ்வெண்ணிக்கைக் குறைவு 2007ம் ஆண்டு வரை வேகமாக இருந்தது, அதற்குப் பின்னர் தாமதம் ஏற்பட்டது என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் இவ்விறப்புக்களை 95 விழுக்காடாகக் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் 1 கோடியே 90 இலட்சம் குழந்தைகள் தட்டம்மைநோய்த் தடுப்பூசிகள் பெறவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.