2012-04-24 15:45:37

ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர்இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள்


ஏப்ரல்,24,2012. பாலியல் செயல்பாடுகளில் இளையோர் அதிக அளவில் ஈடுபடுவதால், அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மக்கள் தொகையும், சமுதாய முன்னேற்றமும் என்ற ஐ.நா.வின் பணிக்குழு நியூயார்க் நகரில் இத்திங்களன்று துவக்கிய ஒருவாரக் கருத்தரங்கின் முதல் அமர்வில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
47 நாடுகளின் பிரதிநிதிகளும், 500க்கும் அதிகமான அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில், இளையோரைத் தகுந்த வழியில் சக்திமிக்கவர்களாக மாற்றும் வழிகளை அனைத்து நாடுகளும் கண்டுணர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
வருகிற ஜூன் மாதம் Rio+20 என்ற பன்னாட்டு உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் Rioவில் நடைபெறும் வேளையில், இளையோரை மனதில் கொண்டு உலகின் முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியை அனைத்து நாடுகளும் கேட்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்று ஐ.நா. தலைவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும் 2000 இளையோர் HIV நோயால் தாக்கப்படுகின்றனர் மற்றும், ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர் இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள் என்ற புள்ளி விவரங்களைக் கூறிய பான் கி மூன், இந்த எண்ணிக்கைகளை விரைவில் குறைக்கும் பெரும் கடமை உலகச் சமுதாயத்திற்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.