2012-04-24 15:44:40

இசுலாமிய மசூதி அகற்றப்பட இலங்கை அமைச்சகம் கட்டளை


ஏப்ரல்,24,2012. இலங்கையில் புத்த மதத்தவரின் புனிதப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை நகரிலிருந்து 50 வருட தொன்மையுடைய இசுலாமிய மசூதியும், இந்து கோவில் ஒன்றும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளது அந்நாட்டு மத விவகார அமைச்சகம்.
தம்புள்ளையின் கிராமப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புத்த மதத்துறவிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத விவகாரங்களுக்கான அமைச்சகம் அறிவித்தது.
தம்புள்ளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் புனித நகராக நிறுவப்பட்டு, அங்குள்ள அனுமதி பெறாத அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என்றார் அப்பகுதியின் புத்த தலைமைக்குரு Inamaluwe Sri Sumangala Thero.
தம்புள்ளை பகுதியிலிருந்து இசுலாம் மற்றும் இந்துக் கோவில்களை அகற்றுவதற்கான அமைச்சகத்தின் தீர்மானத்தை அரசு நிறைவேற்றவேண்டும் அல்லது மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மேலும் கூறினார் அவர்.
இதற்கிடையே, தம்புள்ளை மசூதி, அரசு அனுமதியுடனேயே கட்டப்பட்டதாகவும், அது கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இன்றி செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி இசுலாமியர்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.