2012-04-23 15:54:38

பிலிப்பீன்ஸில் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்கள் குறித்து கிறிஸ்தவ சபைகள் கவலை.


ஏப்ரல் 23, 2012. பிலிப்பீன்சின் Mindanao பகுதி கிராமப்புறங்கள் இராணுவமயமாகி வருவதால், நாட்டிற்குள்ளேயே அகதிகளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் துன்புறும் சூழல்கள் உருவாகியுள்ளதாக அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
மக்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும்போது அவர்கள் தங்கள் விவசாய நிலங்களையும் பள்ளிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வரவேண்டியுள்ளது என தங்கள் கவலையை வெளியிடும் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள், குழந்தைகளின் பள்ளிகளும் மக்களின் வழிபாட்டுத்தலங்களும் இராணுவமுகாம்களாக மாறி வருகின்றன எனவும் குற்றஞ்சாட்டினர்.
இத்தகைய கட்டாய இடம்பெயர்வுகளால் மின்டனாவோவின் Mamanwa பூர்வீகக் குடிமக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவக் கூட்டமைப்புகளின் அறிக்கை தெரிவிக்கிறது. பிலிப்பீன்ஸில் உள்நாட்டுபோர் இடம்பெறும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தற்போது நாட்டுக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் நிலை உருவாகியுள்ளது குறித்து அந்நாட்டின் மதக்குழுக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து இத்திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் இரு நாள் கருத்தரங்கை நடத்தி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.