2012-04-21 14:41:10

மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் : மருத்துவ நிபுணர்கள் தகவல்


ஏப்.21,2012: மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது என்றும், சென்னையில் 30 விழுக்காட்டினருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடங்கியுள்ள, குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
பிரிட்டனைச் சேர்ந்த 10 நிபுணர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதிகமாக மது அருந்துதல், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, ஈரலில் கொழுப்பு அதிகரித்தல் ஆகிய காரணங்களால் ஈரல் நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் ஈரல் நோயால் இறக்கின்றனர். நான்கு விழுக்காட்டு இந்தியர்கள் ஹெபடைடிஸ் பி நோய்க் கிருமிகளாலும், ஒரு விழுக்காட்டினர் ஹெபடைடிஸ் சி நோய்க் கிருமிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறினர்.
அண்மைக் கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 200 கோடிப் பேர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் என்றும், இதில், 76 இலட்சம் பேருக்கு ஈரல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 30 விழுக்காட்டு இந்தியர்கள் மதுப்பழக்கம் கொண்டுள்ளனர். இதில், 13 விழுக்காட்டினர் தினமும் மது அருந்துகின்றனர். சிரோசிஸ் நிலைக்கு வந்த நோயாளிகளில் 50 விழுக்காட்டினர் மதுப்பழக்கம் கொண்டவர்கள்.
ஈரல் நோய் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஈரலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நிபுணர்கள் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.