2012-04-19 15:15:24

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு


ஏப்ரல்,19,2012. கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 19 இவ்வியாழனன்று ஏழு ஆண்டுகள் நிறைவு காணும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் பிற அரசியல் தலைவர்களும் தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவின் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன், மனிதம் மற்றும் அமைதியின் வழியில் பல்வேறு மதத்தவரை ஒன்றிணைப்பதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அயராது உழைத்து வருவதை அதில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியப் பிரதமர் மாரியோ மோந்தி வத்திக்கான் சென்று நேரிடையாகத் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
ஏறக்குறைய 23 ஆண்டுகள் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிய ஜெர்மானியக் கர்தினால் ஜோசப் ராட்சிங்கர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணிக்குத் திருஅவையின் 256 வது பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெனடிக்ட் என்ற பெயரைத் தெரிந்தெடுத்து, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆக திருஅவையை வழிநடத்தி வரும் அவர், இந்த ஏப்ரல் 16ம் தேதி 85 வயதையும் எட்டியுள்ளார். “ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் எளிமையும் பணிவும் கொண்ட வேலையாள்” என்று தன்னைப் பற்றித் தனது முதல் உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.