2012-04-18 15:12:56

இந்தியாவில் நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் - கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ்


ஏப்ரல்,18,2012. இந்தியாவில் நற்செய்தியைப் பரப்புவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், இந்தியாவின் கலாச்சாரம், அரசியல், பொதுவாழ்வு ஆகிய அனைத்து அம்சங்களும் நற்செய்தியின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.
இந்தியாவில் கிறிஸ்தவம் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து இங்குள்ள இந்து மதத்தினர் பொதுவாக இம்மதத்தை காத்து வந்துள்ளனர் என்று சீரோ மலங்கரா ரீதி திருஅவையின் தலைவர் பேராயர் Baselios Mar Cleemis இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் கூறினார்.
கத்தோலிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசுவாசம் இறைவன் வழங்கிய ஒரு கோடை என்பதால், அதனைப் பிறரோடு பகிர்வதற்கு எவ்விதமான கட்டுப்பாடும் தேவையில்லை என்று பேராயர் Cleemis எடுத்துரைத்தார்.
துவக்க அமர்வில் பங்கேற்ற பெங்களூரு பேராயர் Bernard Moras, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள் உலகப்போக்கில் மாறிவருவதால், கிறிஸ்தவ நன்னெறிகளையும் நற்செய்தி மதிப்பீடுகளையும் பறைசாற்றுவது கடினமாகி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.