2012-04-17 15:23:49

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 117


RealAudioMP3 அன்பார்ந்தவர்களே! அன்பு என்பது இது தான் என வரையறுக்கமுடியாத சொல். அன்பை வெறுமனே ஒரு சொல் என்று சொல்வதைவிட அனுபவம் என்று சொல்வதே சரியெனக் கருதுகிறேன். இவ்வுலகில் அன்பை அனுபவிக்காத, அன்பு செலுத்தாத மனிதர்கள் இருக்கமுடியாது. எல்லா மனிதர்களுமே அன்பை அனுபவித்தவர்கள், அன்பு செலுத்துபவர்கள் என்றால் பிறகு உலகில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? தம்பதியருக்கிடையே மணமுறிவு, உடன்பிறந்தவர்களுக்கிடையில் வருடக்கணக்கில் பேச்சு வார்த்தையில்லாத நிலை, தீராத பகை. இதற்கு இன்றைய விவிலியத்தேடலில் விடை காண முயல்வோம். இன்றைய விவிலியத்தேடலின் மையக்கருத்து மாறாத அன்பு. அன்பார்ந்தவர்களே! நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 117. இத்திருப்பாடல் இரு சொற்றொடர்களை மட்டும் கொண்டது.
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!

யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் ஆணடவரல்ல. மாறாக எல்லா நாட்டினருக்கும், இனத்தவருக்கும் அவர் ஆண்டவரே. எனவே எல்லாரும் வாருங்கள், அவரைப் புகழ்வோம் எனத் துவங்கி, அவரது அன்பு என்றும் மாறாதது, மிகப்பெரியது, உண்மையானது, என்றென்றும் நிலைத்துள்ளது என்று சொல்லி முடிகிறது.
அன்பார்ந்தவர்களே! இறைவனின் அன்பு மாறாத அன்பா?

பழைய ஏற்பாட்டு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போது, யாவே இறைவன் இஸ்ரயேலைத் தன் சொந்தப்பிள்ளை எனவும், தான் இஸ்ரயேலுடைய தந்தை எனவும் சொல்லி உடன்படிக்கை செய்தார். உடன்படிக்கை செய்ததோடல்லாமல், தந்தைக்கே உரிய பாணியில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்களது தேவைகளைப் பூர்த்திச் செய்து வழிகாட்டி வந்தார். அதே சமயம் பிள்ளைகளுக்கே உரிய பாணியில், இஸ்ரயேல் மக்கள் தந்தையின் சொல்லைக் கேளாத, கலக்காரர்களாக, கிளர்ச்சியாளர்களாக, பகைமை வளர்க்கும் கல்நெஞ்சக்காரர்களாக வாழ்ந்தனர். இதோ சில எடுத்துக்காட்டுகள்:
கானான் நாட்டை நோக்கி அவர்கள் சென்ற பாலைவனப் பயணத்திலே உணவு இல்லை என்று முணுமுணுத்தது; தண்ணீர் இல்லை என்று புலம்பியது; எகிப்திற்குத் திரும்புமாறு வாக்குவாதம் செய்தது; ஆபிரகாம், ஆரோன், மோசே போன்ற இறைவாக்கினர்களுக்கு எதிராகப் பேசியது; பிற நாடுகளையும், இனத்தவர்களையும் போல தங்களுக்கென அரசர்கள் வேண்டுமென கலகம் செய்தது; யாவே இறைவனை மறந்து பொன்னாலான கன்றுக்குட்டிகளைச் செய்து வழிபட்டது; பாகாலுக்கு ஊழியம் செய்தது; அவர்களுக்கு இறைவாக்குச் சொல்ல அனுப்பப்பட்ட பாலாம், உரியா போன்ற இறைவாக்கினர்களைக் கொன்றது எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இதைத்தான் திருப்பாடல் 78: 10 - 11 இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொல்கின்றன.
அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை; அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர்.
அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர்.

இவ்வாறு அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்காமல் பாவம் செய்த இஸ்ரயேல் மக்களை யாவே இறைவன் உதறித் தள்ளவில்லை. பலமுறை பாவம் செய்தாலும், ஒவ்வொரு முறையும் மன்னித்து ஏற்றுக்கொண்டார். இதற்குக் காரணம் அவரது மாறாத அன்பே. ஏனெனில் அவரது அன்பு அவர்களது செயல்களைப் பொறுத்து வெளிப்படவில்லை. “நீங்கள் இப்படி செய்தால் மட்டும்தான் உங்களை அன்பு செய்வேன்” என்று அவர் ஒரு போதும் சொன்னதில்லை. ஏனெனில் அவரது அன்பு நிபந்தனையற்றது. அவர்களோடு அவர் செய்த கொண்ட உடன்படிக்கையை மீறி அவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தனர். அதற்காக அவர் அவர்களை வெறுத்துவிடவில்லை. மாறாக அவர்களோடு புதிய உடன்படிக்கை செய்தார். இதைத்தான் எரேமியா இறைவாக்கினர் இவ்வாறு சொல்கிறார். 31:31-33
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.

இவ்வாறு சிந்திக்கும் போது மிகப்பெரிய கேள்வி எழுவது இயல்பானதே. தான் கொடுத்த கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை, பாகாலை வழிபட்டனர், தான் அனுப்பிய இறைவாக்கினர்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்ற காரணங்களால் யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்; கோபம் கொண்டார்; அவர்களுக்கு தண்டனை தீர்ப்பு அளித்தார். இதனால் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள் என விவிலியத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். இவற்றையெல்லாம் செய்த யாவே இறைவனின் அன்பு மாறாத அன்பா? அவரது அன்பு உண்மையானது, மாறாதது என்றால் ஏன் இத்தகைய துன்பங்களை அவர்களுக்கு அளித்தார்? அன்பு இதயங்களே! உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இத்ததைய கேள்விகள் எழுகின்றன. எல்லாருக்குமே இக்கேள்விகள் எழுவது இயற்கையே. அப்படியானால் இதற்கு பதில் என்ன?

யாவே இறைவன் சில வேளைகளில் பாராமுகமாய் இருந்ததும், இஸ்ரயேல் மக்களைத் தண்டித்ததும் உண்மைதான். இதை வைத்துக்கொண்டு இறைவன் அன்பில்லாமல்தான் இவ்வாறு செய்தார் என்றும் சொல்லிவிடமுடியாது. அவர் அவர்கள் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தான் இவ்வாறு செய்தார். தண்டனைகளும், பாராமுகமும் இறை அன்பின் மற்றொரு வெளிப்பாடு. கேட்பதையெல்லாம் கொடுப்பதும், செய்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் உண்மை அன்பல்ல. சொல்லப்போனால் இத்தகையது அன்பே அல்ல. அதே போல தான் கேட்பதெல்லாம் கிடைக்கவேண்டும், நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும், அவை நிறைவேறும்போதுதான் நம்மீது மற்றவர்கள் அன்பு கொண்டுள்ளனர் என்று நினைப்பதும் சரியல்ல. அது மிகவும் தவறானது. உண்மையில் அது அன்பே அல்ல. இறைவனின் பாராமுகமும், தண்டனை தீர்ப்பும் இஸ்ரயேல் மக்களை நல்வழியில் கெண்டுவருவதற்காக அவர் பயன்படுத்திய கருவிகள்.

அன்பு இதயங்களே! இதையெல்லாம் கேட்கும்போது நாமும் பிறர் மீது கொண்ட அக்கறையில்தான் கோபப்படுகிறோம், கண்டிக்கிறோம், கனமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். எனவே நமது அன்பும் மாறாத அன்புதான் என்று சொல்லத் தோன்றுகிறதா? ஆனால் என்னைப் பொறுத்தவரை நமது அன்பிற்கும் இறைவனின் மாறாத அன்பிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பிறர் தவறு செய்துவிட்டால் நாமும் மன்னிக்கிறோம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அம்மன்னிப்பு முழுமையானதா? என்பதுதான் கேள்விக்குறி. அப்படியே மன்னித்தாலும், அதை முற்றிலுமாக மறக்க நம்மால் முடிவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல, பிறர் செய்கின்ற தவறுகளை நாம் மன்னித்தாலும், சிறிது சிறிதாக நம் மனதில் வெறுப்பு உருவாகிறது. இது அன்பைப் குறைக்கிறது. இது நாளடைவில் அல்லது சில ஆண்டுகளில் அன்பைக் குறைத்து வெறுப்பை வளர்த்துவிடுகிறது. இதன் விளைவுதான் தம்பதியருக்கிடையிலான மணமுறிவு, உடன்பிறந்தவர்களுக்கிடையே தீராத பகை, பிறரைப் பழிவாங்கும் உணர்வு.
நான் எத்தனை முறைகள் சொன்னேன், என் பேச்சைக் கேட்டாயா? கேட்கவில்லை. எனவே இப்போது அனுபவிக்கிறாய், நன்றாக அனுபவி என்று வெறுப்பைக் கொட்டும் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், மூத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் காட்டுவது மாறாத அன்பா? என் பிள்ளையின் நலம், என் உடன்பிறந்தோரின் நலம் என்பதைவிட என் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதான் இவர்களுக்குப் பெரிதாகி விடுகிறது.

இன்றைய உலகில் ஒருவருடைய பிறந்தநாள் அல்லது திருமணவிழா என எதாவது ஒரு விழாவில் பரிசுப்பொருள் ஒன்றைக்கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டவர் அந்தப் பரிசை வழங்கியவருக்கு எதாவது ஒரு விழாவில் கலந்து கொண்டு, அதே அளவு மதிப்பு மிக்க பரிசை வழங்குகிறோம். அப்படி வழங்குவது நல்ல பழக்கம் எனவும் கருதுகிறோம். ஆனால் அவ்வாறு கொடுக்காவிட்டால், ஏன் சிறிய பரிசாகக் கொடுத்தாய் என முறையிடுவோர் ஒரு புறமும், சிறிய பொருளைக் கொடுத்தபிறகு அவர்களோடு கொண்டிருக்கக் கூடிய உறவைத் துண்டித்துக் கொள்வோர் அல்லது அவர்களோடு உறவாடுவதைச் சிறிது சிறிதாக குறைத்துக் கொள்வோர் மறுபுறமும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவை இறைவனின் மாறாத அன்பிற்கு நேர் எதிரான செயல்கள். நாம் எதிர்பார்ப்பதைப் பிறர் நிறைவேற்றாத போது, அவர்களை வெறுக்கிறோம். இறைவன் அவ்வாறு வெறுக்க ஆரம்பித்தால், நமது நிலை என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நீ என்னை எவ்வாறு வதைத்தாயோ, அதே போல நானும் உன்னை வதைத்தால்தான் எனக்கு எப்படி வலித்தது என உனக்குப் புரியும் என்று பழிவாங்குதலில் ஈடுபடும் போது, இறைவனின் மாறாத அன்பிலிருந்து நாம் வெகு தொலைவிற்குச் சென்றுவிடுகிறோம். நம் வாழ்வின் பல நேரங்களில் நமது அன்பைவிட நமது பகைமை உணர்வு மனதை நிறைக்கிறது அல்லது மேலோங்கி நிற்கிறது.. எவ்வாறெல்லாம் பிறர் மீது அக்கறையைக் காட்ட வேண்டும் என்பதை விட எவ்வாறெல்லாம் பிறரைப் பழிவாங்கலாம் என்று சிந்திப்பதில் நேரத்தைச் செலவழிக்கிறோம்.
ஆனால் யாவே இறைவனைப் பொறுத்தவரை, அவரது மாறாத அன்பிற்கு அடிப்படையே மன்னிப்புதான். இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுகளை மன்னித்து, மறந்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதுதான் அவரது அன்பின் சிறப்பம்சம். இதைத்தான் சற்றுமுன் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டேன்.

பிறர் தவறு செய்யும் போது கோபமே படக்கூடாது என்று சொல்லவில்லை. கோபம் வருவது மனித இயல்பு. கோபப்படாத மனிதர்கள் இருக்கமுடியாது. ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறக்கூடாது. அந்த வெறுப்பு நாம் பிறர் மீது கொண்டிருக்கும் அன்பை வேரோடு பிடுங்கிவிடக்கூடாது. இஸ்ரயேல் மக்கள் நற்பாதையிலிருந்து விலகுகிறார்கள், அது அவர்களது மகிழ்ச்சியைப் பறித்துவிடுமே என்பது தான் யாவே இறைவனின் கோபத்திற்கான காரணமாக இருந்தது. அவரது கோபத்திலும் அன்பு இருந்தது. கோபத்திற்கு பிறகும் அன்பு இருந்தது. அது முடிவில்லாத அன்பு, என்றும் மாறாத அன்பு.
அன்பார்ந்தவர்களே! இறைவன் நம்மீது மாறாத அன்பைப் பொழிகிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நம்மீது பொழியப்படுகின்ற மாறாத இறையன்பின் இலக்கு நம்மையும் அத்தகைய அன்பாக மாற்றுவதுதான். அவ்வப்போது எல்லாவற்றையும் மறந்து அன்பைப் பொழியும் நாம், நம் இறைவனைப் போன்று மாறாத அன்பைப் பொழிபவர்களாக மாற வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.