2012-04-17 15:38:33

காபுலில் நடைபெற்ற திட்டமிட்டத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் வன்மையான கண்டனம்


ஏப்ரல்,17,2012. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு தாக்குதலிலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும், அந்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் மக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற பல்வேறு திட்டமிட்டத் தாக்குதல்களில், அரசுக் கட்டிடங்களும், பன்னாட்டு அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், ஆப்கானிஸ்தான் இராணுவம் திறமைமிக்க வகையில் செயலாற்றியதையும் பாராட்டினார்.
அடிப்படைவாதக் குழுவினரான தாலிபான் மேற்கொள்ளும் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கினாலும், தாலிபான் அமைப்பின் சக்தி குறைந்து வருவதையும், இராணுவம் திறமையோடு செயல்படுவதையும் காணும் மக்களிடம் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது என்று ACSF எனப்படும் ஆப்கானிஸ்தான் கலாச்சார சமுதாயக் கழகத்தின் இயக்குனர் Aziz Rafiee, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தாலிபான் ஆதிக்கம் பெரிதும் வலுவிழந்துள்ளது என்பது புரிந்தாலும், ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை உருவாக இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என்றும், அதுவரை மக்கள் நம்பிக்கை இழக்காமல் எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் Aziz Rafiee வேண்டுகோள் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.