2012-04-17 15:38:20

இன்றும் உலகில் 40 கோடி சிறார் அடிமைகள்


ஏப்ரல்,17,2012. இன்றும் உலகில் 40 கோடி சிறார்கள் அடிமைகள் போல் பணியாற்றி வருவதாக திரு அவை அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
பெரும்பான்மையான சிறார்கள் பொருட்கள் உற்பத்தித் துறையில் பணியாற்றுவதாகவும், அத்தகைய பொருட்களே மேற்கத்திய நாடுகளில் விற்பனைக்கு வருவதாகவும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளின் காஃபி, வாழைப்பழம், பாகிஸ்தானின் தரைவிரிப்புகள், இந்தியாவிலிருந்து வரும் ஆபரணங்கள், சட்டைகள் ஆகியவைகளில் சிறார்களின் உழைப்பு உள்ளது எனக் கூறும் இஸ்பானிய துறவு சபைகளின் கூட்டமைப்பு, குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை எதிர்த்துப் போராட வேண்டிய அரசின் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.
ஏப்ரல் 16, இத்திங்களன்று உலகம் முழுவதும் சிறுவர் அடிமைத்தொழில் குறித்த விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் நான்கு வயதிலிருந்தே அடிமைத் தொழிலாளியாகப் பணியாற்றிய கிறிஸ்தவ சிறுவன் Iqbal Masih, உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன் 12ம் வயதில், 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி பாகிஸ்தானில் துணிநெய்தல் துறையின் முதலாளி கும்பலால் கொல்லப்பட்டான்.
சிறுவன் Iqbal Masihன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி சிறுவர் அடிமைத்தொழில் குறித்த விழிப்புணர்வு தினம் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.