2012-04-16 15:50:42

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்ரல்,16,2012. ஒவ்வோர் ஆண்டும் நாம் கிறிஸ்து உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும்போது, உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்த அவரது முதல் சீடர்களின் அனுபவத்தை மீண்டும் வாழ்கிறோம் என இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்துவர்களின் வழிபாடு என்பது கடந்த கால நிகழ்வுகளின் நினைவோ, மறைபொருளோ அல்லது உள்மன அனுபவமோ அல்ல, மாறாக உயிர்த்த கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் நேரடி சந்திப்பு என்றார் திருத்தந்தை.
உயிர்த்தபின் சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என வாழ்த்தி வழங்கியது, தீமையின் மீது அவர் கண்ட வெற்றி எனும் கனியாகும் என்றார்.
உயிர்ப்புத் திருவிழாவுக்குப் பின்வரும் ஞாயிறை 'இறை இரக்கத்தின் ஞாயிறாக' முன்னாள் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான் பால் அறிவித்ததன் காரணங்களையும் இந்த அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் பாப்பிறை.
இறை அன்பின் கனியாகிய அமைதியை இயேசு தன் சீடர்களுக்கு வழங்கினார் என்று கூறியத் திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்துவை விசுவாசத்துடன் நெருங்குபவர்கள், முடிவற்ற வாழ்வெனும் கொடையைப் பெறுவார்கள் என மேலும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.