2012-04-14 15:31:04

வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்தப்பட பிலிப்பீன்ஸ் ஆயர் வலியுறுத்தல்


ஏப்.14,2012. ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தத்தை பிலிப்பீன்ஸ் அரசு உடனடியாக அமல்படுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமூக நடவடிக்கை, நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் தலைவர் மனிலா துணை ஆயர் Broderick Pabillo வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டவர் வெளிநாடுகளில் வேலை செய்யும் போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், வீட்டு வேலை செய்பவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும் அந்நாடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஆயர் Pabillo கூறினார்.
ILO நிறுவனத்தின் வீட்டுத் தொழிலாளர் குறித்து ஒப்பந்தத்தின் எண் C189 ஐ உடனடியாக அமல்படுத்துவதன் மூலம், பிலிப்பீன்ஸ் நாடு பிற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க முடியும் என்றும் ஆயர் கூறினார்.
பிலிப்பீன்சில் வீட்டுவேலை செய்பவர்கள் குறித்த Visayan அமைப்பு வெளியிட்ட உண்மை நிலவரங்களின்படி, அந்நாட்டில் 6 இலட்சம் முதல் 25 இலட்சம் பேர் வரை வீட்டுவேலை செய்கின்றனர் என்று தெரிகிறது. 2008ம் ஆண்டில் சுமார் 54 ஆயிரம் பிலிப்பீன்ஸ் மக்கள், வீட்டுவேலை செய்வதற்கென வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.