2012-04-14 15:29:11

திருப்பீடப் பிரதிநிதி : வியட்நாம் ஆயர்கள் வெளியுலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்


ஏப்.14,2012: கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தது போல, வியட்நாம் திருஅவையும் உயிர்க்க வேண்டுமென்று, சிங்கப்பூர் திருப்பீடத் தூதரும், வியட்நாமுக்கான திருப்பீடப் பிரதிநிதியுமான பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி கேட்டுக் கொண்டார்.
திருஅவைக்குள் இருக்கும் பிரச்சனைகளிலே மூழ்கி விடாமல் வெளியுலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்றும், வியட்நாம் ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் வலியுறுத்தினார் பேராயர் ஜிரெல்லி.
அரசு அதிகாரிகளால் தொடர் அடக்குமுறைகள், பொருளாதார நெருக்கடி, சமூக அநீதி, ஊழல், நில அபகரிப்பு, போதைப்பொருள் விநியோகம், இளம் பெண்கள் மத்தியில் கருகலைப்புக்கள் என பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்துள்ள வியட்நாம் சமுதாயத்தின் எதிர்கால மேய்ப்புப்பணி குறித்து ஆயர்கள் கவலை கொண்டுள்ள வேளை, பேராயர் ஜிரெல்லி இவ்வாறு கூறினார்.
90 விழுக்காட்டு மக்கள் கடவுள் மற்றும் கிறிஸ்தவம் பற்றி அறியாதிருக்கும் வியட்நாமில், இச்சவால்களைச் சந்திப்பதற்கு ஆயர்கள் தங்களது மக்களை, மேய்ப்பனைப் போல் பாதுகாக்க வேண்டும் எனவும் வியட்நாம் திருப்பீடப் பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு வியட்நாமில் நடைபெறவிருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.