2012-04-14 15:27:18

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கருணையின் வடிவே கடவுள் என்பதை எல்லா சமயங்களும் சொல்கின்றன. கருணை வடிவான கடவுளைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது…
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை கடவுள் கருணையின் ஞாயிறு, அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இந்த இறை இரக்கத்தின் ஞாயிறை வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக 2000மாம் ஆண்டில் இணைத்தவர் அருளாளர் இரண்டாம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின், சென்ற ஆண்டு 2011, மேமாதம் முதல் தேதியன்று, இந்த இறை இரக்கத்தின் ஞாயிறன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்பட்டார். அந்த நிகழ்வு உலகின் பல கோடி மக்கள் மனதில் நிறைந்த ஓர் அற்புத நிகழ்வாக இருந்தது.

இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல நேரங்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். முக்கியமாக, சந்தேகமும் அச்சமும் நம் வாழ்வைச் சூழ்ந்தாலும், இறை இரக்கத்தை நம்பி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையமுடியும் என்பதை இறையடியார் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்பட்ட அந்த வரலாற்று நிகழ்வு நமக்குக் காட்டியது.
இதற்கு நேர்மாறாக, தங்களைத் தாங்களே இயக்கிக்கொள்ள முடியும், இறைவனோ, வேறு எந்த சக்தியோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்று ஆரம்பித்த ஒரு நிகழ்வு துயரத்தின் ஆழத்தில் புதைந்த மற்றொரு வரலாற்று நிகழ்வையும் இன்று நாம் சிந்திக்க வேண்டும். இது நடந்தது 100 ஆண்டுகளுக்கு முன்.

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால், 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் மிதந்து சென்ற இரு மலைகள் மோதிக் கொண்டன. அவற்றில் ஒன்று, பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிவந்த பனிப்பாறை. மற்றொன்று, மூன்று ஆண்டுகள் மனிதர்கள் உருவாக்கிய செயற்கையான இரும்பு எஃகு மலை. கடலில் மிதந்து வந்த இந்த இரும்பு மலையின் மற்றொரு பெயர் 'டைட்டானிக்'.
1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தின் Southampton துறைமுகத்தில் இருந்து 'டைட்டானிக்' கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' (“Even God himself couldn't sink this ship.”) என்று இந்தக் கப்பலை இயக்கிய கேப்டன் Edward John Smith சொன்னாராம். இந்தப் பெருமையுடன், இறுமாப்புடன் கிளம்பிய அந்தக் கப்பல் ஜந்தாம் நாள் நள்ளிரவு பனிப்பாறையில் மோதியது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் அந்தக் கப்பல் இரண்டாகப் பிளந்து, நடுக்கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் அந்த இருளில், குளிரில், கடலில் உயிர் துறந்தனர்.
உலகிலேயே நகர்ந்து செல்லக்கூடிய மிகப்பெரிய அரண்மனை என்றெல்லாம் பறைசாற்றப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே சமாதியானதன் முதல் நூற்றாண்டைப் பல வழிகளிலும் இன்று ஊடகங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. நமது ஞாயிறு சிந்தனையிலும் இதைப்பற்றிச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எழலாம். இந்த நிகழ்வை இங்கு சொல்வதற்கு ஒரே காரணம்... எதுவும், எவ்வகையிலும் தங்களைத் தீண்ட முடியாது என்ற இறுமாப்பு ஏற்பட்டால், வாழ்வில் என்ன நிகழக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுவது ஒன்றே அக்காரணம்.

ஒரு கப்பல் கடலில் சந்திக்கக் கூடிய பல்வேறு ஆபத்துக்களையும் முன்கூட்டியே நினைத்துப்பார்த்து, அந்த ஆபத்துக்களை வெல்லும் வகையில் 'டைட்டானிக்' உருவாக்கப்பட்டது. எவ்வகை ஆபத்து வந்தாலும், இந்தக் கப்பல் நீரில் மூழ்காது என்பது இதை உருவாக்கியவர்களின் கணிப்பு. இந்தக் கணிப்பினால் உருவான இறுமாப்பே இந்தக் கப்பலை மூழ்கடித்தது. கப்பல் மூழ்கியதைவிட, அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இறந்ததுதான் பெரும் அதிர்ச்சியை, ஆத்திரத்தை, கேள்விகளை எழுப்பியது. பயணிகள் யாரும் இறந்திருக்கத் தேவையில்லை. தஙகளை யாரும், எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புதான் அத்தனை பேரின் உயிரைப் பலி வாங்கியது.
எந்த ஒரு கப்பலும் கடலில் பயணம் மேற்கொள்ளும்போது, ஏதாவது ஆபத்து நேர்ந்தால், கப்பலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கத் தேவையான உயிர்காக்கும் படகுகள் கப்பலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இது கடல் பயணங்களின் சட்டம். 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, அது மூழ்கும் வாய்ப்பே இல்லை என்று பெருமையுடன் அறிவித்ததால், அந்தக் கப்பல் சட்டப்படி எடுத்துச் செல்லவேண்டிய படகுகளில் பாதி எண்ணிக்கையையே சுமந்து சென்றது. கப்பலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படகுகளும் இருந்திருந்தால், ஒருவரும் இறந்திருக்கத் தேவையில்லை.
அது மட்டுமல்ல, டைட்டானிக் செல்லும் பாதையில், பனிப்பாறைகளில் மோதும் ஆபத்து இருந்தது என்று மற்ற கப்பல்களில் இருந்து ஏழு முறை எச்சரிக்கைச் செய்திகளும் வந்தன. ஆனால், டைட்டானிக் கப்பலை இயக்கியவர்கள் அந்த எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. கப்பலை உருவாக்கியவர்கள், அதனை இயக்கியவர்கள் எல்லாருக்கும் அந்த கப்பலின் சக்தி மீது அளவுக்கு மீறிய, ஆபத்தான நம்பிக்கை இருந்தது. இதுதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு பாடம்.

வாழ்வில் நம்பிக்கை தேவைதான். சிறப்பாக, பாஸ்கா காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் உண்மை... நம்பிக்கை. நம்பிக்கையற்ற வாழ்வு நடுக்கடலில் தத்தளிக்கும் படகுபோல் இருக்கும்... ஆனால், எதன்மேல் நம்பிக்கை கொள்வது, எவ்வகையான நம்பிக்கை கொள்வது என்பதையும் நாம் தீர ஆராய வேண்டும். நம்பிக்கையை வளர்க்கும் இந்த பாஸ்கா காலத்தில், நம்பிக்கை இழந்து நடுக்கடலில், சந்தேகப்புயலில் தத்தளித்த சீடர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு இன்று நமது நற்செய்தியாகிறது.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திதிம் அல்லது தோமையார் என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரிவள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.
தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து விடுகிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். அதுவும் நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை பல நேரங்களில் சந்தேகப்படும் நாம், தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவைவிட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். மேலும், உயிர்ப்புக்குப் பின் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த நிகழ்ச்சிகளை நான்கு நற்செய்திகளிலும் நாம் கவனமாக வாசித்தால், இயேசுவின் உயிர்ப்பைத் தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். அந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு பறிக்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன. தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்?

கருணையே வடிவான இயேசு, சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு கூறிய பதில் இதுதான்: இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்றார். (யோவான் 21: 27-29)
இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" இயேசுவைக் கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் பறைசாற்றினார் தோமா.

அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.