2012-04-14 15:30:09

85 வயது காணும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஏழாண்டு பாப்பிறைப் பணி


ஏப்.14,2012 : இம்மாதம் 16ம் தேதி 85 வயதையும் 19ம் தேதி பாப்பிறைப் பணிக்குத் தேர்வு செய்த 7 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறைவனின் கரங்களில் இறைவனுக்கும் அவரது திருஅவைக்கும் பணி செய்கிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் “Octava Dies” என்ற வார நிகழ்ச்சியில் திருத்தந்தையின் இந்த “இரண்டு ஆண்டு நிறைவுகள்” பற்றிப் பேசினார்.
விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தை பல ஆண்டுகளாக வழிநடத்தியவர், வயதான காலத்தில் பாப்பிறைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் எவ்வாறு உலகளாவியத் திருஅவையின் மேய்ப்புப்பணி நிர்வாகத்தை நடத்தப் போகிறார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.
ஆயினும், கடந்த ஏழு ஆண்டுகளில் 23 நாடுகளுக்கு 23 வெளிநாட்டுத் திருப்பயணங்களையும் இத்தாலிக்கு 26 திருப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார், மேலும், உலகக் குடும்பங்கள் மாநாட்டிலும் மத்திய கிழக்குக்கும் அவரோடு பயணம் செய்யவிருக்கின்றோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
நான்கு உலக ஆயர் மாமன்றங்கள், மூன்று உலக இளையோர் தினங்கள், மூன்று திருமடல்கள், எண்ணற்ற உரைகள், திருஅவையின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள், பவுல் ஆண்டு, அருட்பணியாளர்கள் ஆண்டு, நாசரேத்தூர் இயேசு என்ற நூல்கள் என பலவற்றுக்கு நாம் சாட்சிகளாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
வருகிற அக்டோபரில் விசுவாச ஆண்டும் உலக ஆயர்கள் மாமன்றமும் தொடங்குகின்றன, திருத்தந்தை இறைவனின் கரங்களில் இறைவனுக்கும் அவரது திருஅவைக்கும் பணி செய்கிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.