இந்தியாவில் சீக்கியத் திருமணங்களுக்கெனத் தனிச்சட்டம்
ஏப்.13,2012. சீக்கியத் திருமணங்களைப் பதிவு செய்வதற்கென தனிச்சட்டம் ஒன்றைக் கொண்டுவர
இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீக்கிய அரசியல் கட்சிகளால் பல்லாண்டு காலமாக
வலியுறுத்தப்பட்டு வந்த “ஆனந்த் திருமணச் சட்டம் 1909”, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே
கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் கபில்
சிபல் நிருபர்களிடம் கூறுகையில், சீக்கியத் திருமணங்களை ஆனந்த் திருமணச் சட்டம் 1909
என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வகையில், மசோதா ஒன்றை பட்ஜெட் தொடரில் கொண்டுவர
மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனந்த் திருமணச் சட்டம் 1909
என்பது, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்திய பிரிவினைக்குப்
பிறகு இந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர், சீக்கியத் திருமணங்கள் இந்து
திருமணச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வந்தன. சீக்கிய அரசியல் கட்சிகள் மற்றும்
அமைப்புகள் தனி திருமணச்சட்டத்தை பல்லாண்டு காலமாக கோரி வந்தன. மத்திய அரசின் இந்த
முடிவிற்கு பஞ்சாபில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இச்சட்டம் மூலம் வெளிநாடுகளில் திருமணம் செய்யப்படும் சீக்கியப் பெண்கள் ஏமாற்றப்படுவது
தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.