2012-04-13 15:04:27

HIV நோய்க் கிருமிகளிருந்து சிறாரைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா. அதிகாரி, திருத்தந்தை சந்திப்பு


ஏப்.13,2012. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து சிறாரைப் பாதுகாப்பதற்கு 2015ம் ஆண்டுக்குள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதற்குத் திருத்தந்தை மற்றும் வத்திக்கான் அதிகாரிகளின் உதவியைக் கேட்டுள்ளார் UNAIDS என்ற ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் Michel Sidibe.
HIVநோய்க் கிருமிகள், தாயிலிருந்து குழந்தைக்குப் பரவாமல் தடுப்பதும், இந்நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து சிறாரை முழுவதுமாகப் பாதுகாப்பதும் UNAIDS நிறுவனத்தின் இலக்காக இருக்கின்றது என்று, இவ்வாரத்தில் திருத்தந்தையைச் சந்தித்த போது தெரிவித்தார் Sidibe.
உலகிலுள்ள இலட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளைக் கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன, இந்நோய்க் கிருமிகள் புதிதாகச் சிறாரரைத் தாக்காமல் இருப்பதற்குக் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது என்று Sidibe மேலும் திருத்தந்தையிடம் கூறினார்.
உலகெங்கும் வழங்கப்படும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கானச் சிகிச்சையில் ஏறக்குறைய 25 விழுக்காட்டைக் கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள் செய்து வருகின்றன என்ற வத்திக்கானின் புள்ளி விபரங்களை ஐ.நா. AIDS கட்டுப்பாட்டு நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
அண்மையில் எய்ட்ஸ் நோய்த் தடுப்பு குறித்து நடைபெற்ற ஐ.நா.உயர்மட்டக் கூட்டத்தில், 22 நாடுகளில் கர்ப்பிணித் தாய்மார்க்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கு உறுதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.