2012-04-11 16:31:28

புனித வாரத்தின்போது லெபனான் நாட்டிலிருந்து ஈராக் நாட்டிற்கு அமைதிக் குழுவின் பயணம்


ஏப்ரல்,11,2012. போரினாலும் வன்முறைகளாலும் மனம் தளர்ந்துள்ள மக்கள் மத்தியில் கவிதைகள் வாசிக்கும் கூட்டங்கள் நடத்துவது பொருத்தமற்றதாய் தெரிந்தாலும், மக்கள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டது நிறைவான ஓர் ஆச்சரியம் என்று Kirkuk உயர்மறைமாவட்டத்தின் கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக லெபனான் நாட்டிலிருந்து ஈராக் நாட்டிற்கு புனித வாரத்தின்போது அமைதிக் குழு ஒன்று பயணத்தை மேற்கொண்டது.
லெபனான் நாட்டைச் சேர்ந்த 84 வயதான அருள்தந்தை Maroun Atallah தலைமையில் ஈராக் சென்றிருந்த அமைதிக் குழுவின் ஒரு முயற்சியாக, கடவுள் அன்பு, சகோதர அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை மையப்பொருளாகக் கொண்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன.
இக்கவிதைக் கூட்டங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் என பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈராக் நாட்டில் முழுமையான அமைதி உருவாக கல்வி ஒன்றே சிறந்த வழி என்று கூறிய அருள்தந்தை Atallah, அமைதி வழிகளைக் கற்பிக்கும் ஒரு முயற்சியாகவே இப்புனித வார கவிதைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.