2012-04-10 14:50:16

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 115


RealAudioMP3 நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 115. இஸ்ரயேல் மக்களைச் சுற்றிலும் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் கடவுளைச் சிலையாகச் செய்து, அதை வழிபட்டனர். ஆனால் இஸ்ரயேல் மக்களோ அவ்வாறு சிலைகளைச் செய்து வழிபடவில்லை. எனவே, அவர்கள் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “உங்கள் யாவே இறைவன் பல்வேறு அதிசயங்களைச் செய்யும் வல்லமை படைத்தவர் என்று சொல்கிறீர்களே, அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருப்பார்”? என்று சொல்லி கேலிச் செய்தனர். பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இக்கேள்விகளெல்லாம் இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையிலும் சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே தங்களைக் கேலிச் செய்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கவும், இஸ்ரயேல் மக்களின் தடுமாற்றத்தைச் சரிப்படுத்தவும், ஆண்டவர் மேல் வைத்த அவர்களின் நம்பிக்கையைத் திடப்படுத்தவும் இத்திருப்பாடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிற கடவுள்களை வழிபட்டோரின் கேள்விகளுக்கு பதிலடிகள் சொல்லும் சொற்றொடர்கள் 4-7 இதோ
அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;
செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை.
கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.

இத்திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம் ஆண்டவர் மேல் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் திடப்படுத்துவதுதான். துவக்கச் சொற்றொடர்களில் எதிரிகளின் கடவுள்களைப் பற்றி எள்ளி நகையாடினாலும், திருப்பாடலின் இரண்டாம் பகுதியில் இஸ்ரயேல் மக்களை உற்சாகமூட்டி நம்பிக்கைக் கொடுத்து, ‘உங்கள் ஆண்டவர் உங்களைப் பார்த்துக் கொள்வார்’ என்று சொல்கிறார். சொற்றொடர்கள் 11-15
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்; நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்;
தமக்கு அஞ்சிநடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்; சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார்.
ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார்.
நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.

அன்பார்ந்தவர்களே இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இத்திருப்பாடல் நமக்குச்சொல்வதென்ன? இத்திருப்பாடல் எழுதப்பட்ட காலத்திலிருந்த வாழ்க்கை முறைக்கும், இன்றைய வாழ்க்கைமுறைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
மனித சமுதாயம் காலத்திற்கேற்ப மாற்றம் பெற்று வருகிறது. கற்களை உரசி நெருப்பு உருவாக்கிய கற்காலத்திற்கும், மண்ணிலிருந்து விண்ணுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிற இக்காலத்திற்கும் உள்ள மாற்றத்தையும் வளர்ச்சியையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அறிவியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் என எல்லா துறைகளிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இம்மாற்றங்களுக்கும், வளர்ச்சிகளுக்கும் மதங்களும் விதிவிலக்கல்ல. மனிதர்கள் ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்’ என்று வாழ்ந்ததொரு காலம். அதே மனிதர்கள் ‘பகைவருக்கும் அன்பு’ என வாழ்ந்ததையும், வாழ்ந்து வருவதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. “நாம் பின்பற்றுகின்ற மதம் மட்டுமே உண்மையானது. எனவே பிற மதங்களை அழிப்போம்” என மதவெறியோடு முழங்கியது அந்தக் காலம். பிற மதங்களோடு உரையாடல் அவசியம் என பல்சமய உரையாடலுக்கு முன் வருவது இந்தக்காலம். அன்று கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினைகள் மட்டுமே உண்மையானது என்று சொன்ன திருச்சபை, இன்று நிறை உண்மையான இறைவனை அடைய வழிகாட்டும் மதங்களின் பன்மைத் தன்மையை மதிப்போடு உற்றுநோக்குகிறது. திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28ம் நாள் கிறிஸ்தவம் அல்லாத பிற மதங்களோடு திருச்சபையின் உறவு பற்றிய NOSTRA AETATE என்ற பிரகடனத்தில் பின்வருமாறு சொல்கிறார்: இந்து, இஸ்லாம் மற்றும் புத்த மதங்கள் அவைகளுக்கே உரிய பாணியில் தத்துவங்கள், படிப்பினைகள் மற்றும் சடங்குமுறைகளைத் தந்து மனித வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கின்றன. அவைகளின் உண்மை மற்றும் புனிதத்தன்மையைக் கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் மறுக்கவில்லை. இச்சமய படிப்பினைகளிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபை பல்வேறு விதங்களில் வேறுபட்டிருந்தாலும், இச்சமயங்கள் மனிதத்தை உண்மைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தரும் வழிமுறைகளையும், படிப்பினைகளையும் நேரிய மனத்தோடு மதிக்கவும் செய்கிறது.

எனவே, என்னைப் பொறுத்தவரை இறைவனை அடைய தடைகளாய் இருப்பவை பிற மதங்களோ, பிற தெய்வங்களோ அல்ல. மாறாக இறைவனுக்குப் பதிலாக, இணையாக நாம் பார்க்கும், பயன்படுத்தும், பொருட்களும், நபர்களும்தான். எனவே இக்காலத்தில் நாம் இறைவனுக்கு இணையாக, பதிலியாக பயன்படுத்துபவை எவை? என்பதைச் சிந்தித்து, அவற்றைக் களைய முயற்சி செய்வோம்.
இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான ஒரு கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டார்கள். ஆனால் நாம் கணக்கற்ற பொருட்களைக் கடவுளாகப் பார்க்கிறோம். கடவுளுக்கு இணையாக, ஏன் கடவுளுக்கும் மேலாகவே பார்க்கிறோம். இன்றைய உலகில் கடவுளுக்கு பதிலியாக, இணையாக இருப்பவை எவை? நம் மனதில் இறைவனுக்குரிய இடத்தைப் பிடிப்பவை எவை? ஜோஸியம், இராசிபலன், வாஸ்து, இராசிக்கல், நல்ல நேரம், கெட்டநேரம் என ஆரம்பித்து திரைப்படங்கள் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் எனத்தொடர்ந்து, திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணாசை, பொன்னாசை, பணம், இணையதளம், கைபேசி என எல்லாமே கடவுளுக்கும் மேலாக நம் மனங்களில் உயர்ந்து நிற்கும் சிலைவழிபாடுகள் என்பது வருத்தத்துக்குரியது. இவையெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள். இவற்றையெல்லாம் நாங்கள் இறைவனாக வழிபடவில்லையே? என்ற கேள்விகள் எழுப்புவது இயற்கையே. சிலைவழிபாடு என்பது உருவங்களை அல்லது கல்லால் மண்ணாலான சிலைகளை வைத்து வழிபடுவது மட்டுமல்ல. மாறாக இறைவனுக்குப் பதிலாக அல்லது இறைவனுக்கு இணையாக பொருட்களை அல்லது மனிதர்களை வழிபடுவது. இவ்வாறு இறைவனுக்கு மாற்றாக நாம் கொண்டிருக்கும் அனைத்துமே சிலைவழிபாடுதான். இதைத்தான் தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு சொல்கிறார். சொற்றொடர்கள் 3:5-7
ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவளின் சினத்தை வரவழைக்கின்றன.
இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.

இன்றைய சிலைவழிபாடுகள் என மேற்சொன்னவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்து அவை எப்படி சிலைவழிபாடாகின்றன என்று சிந்திப்போம். எடுத்துக்காட்டாக இராசிபலன் பார்ப்பது பற்றிச் சிந்திக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி. நன்கு படித்த ஆசிரியை. அவரோடு பணியாற்றும் ஆசிரியை சொன்னாரென்று, தினமும் நாட்காட்டியில் இருக்கும் இராசிபலனைப் பார்க்க ஆரம்பித்தார். விளையாட்டாக இதைத் துவக்கியவர், நாளடைவில் நாட்காட்டியில் மகிழ்ச்சி எனக்குறிப்பிட்டிருந்தால் மகிழ்ச்சியாகவும், வருத்தம் என இருந்தால் வருத்தமாகவும் இருக்கத் துவங்கிவிட்டார். அவரது உள்ளுணர்வை (ஆங்கிலத்திலே MOOD என்று சொல்கிறோம்) அவர் வீட்டு நாட்காட்டி நிர்ணயிப்பதாக மாறியிருந்தது. “இறைவா! இன்றைய நாளை, நல்லதாக அமைத்துக்கொடு” என ஒவ்வொரு நாள் காலையிலும் மன்றாடும் அச்சகோதரிக்கு உயர்ந்தது எல்லாம் வல்ல இறைவனா? அல்லது இராசிபலனா?

சில பெண்களுக்குத் திருமண வயது கடந்தபோதிலும், திருமணம் நடக்கவில்லை என்பது அவர்களின் பெற்றோருக்கு மிகப்பெரிய கவலை. கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாமல் தவிப்பார்கள். இச்சூழல்களில் பலரும் கூறும் அறிவுரையைக் கேட்டு, ஜோஸியம் பார்ப்பார்கள். அதன் விளைவு கிரகங்கள் சரியில்லை, பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்து கிரகங்களைச் சரிப்படுத்திவிட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதை நம்பி பரிகாரம் செய்கிறார்கள். அன்பார்ந்தவர்களே! கிரகங்களைப் படைத்து வழிநடத்துவது இறைவனா? அல்லது ஜோஸியமா? ஜோஸியத்தின் மீதுள்ள நம்பிக்கை இறைவன் மேலுள்ள நம்பிக்கையை மிஞ்சுகிறது என்பது நமக்குப் புரியவில்லையா?

நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு நம் மனதில் எத்தகைய இடத்தை நாம் தந்திருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நடிகைகளுக்குக் கோவில் கட்டி, அக்கோவில்களில் நடிகைகளைத் தெய்வமாக வணங்குவது நமது ஊரில்தான் நடக்கிறது. நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். ஆனால் அவர்களை இறைவனோடு ஒப்பிட்டு பட்டங்கள், படங்கள் வெளியிடுவது நம் சமூகங்களில் நடக்காமல் இல்லை. இவையெல்லாம் வெளியுலகில் மட்டும் நடக்கிறது யாரோ செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. நமது மனதைச் சற்று அலசிப்பார்ப்போம். இன்றைய உலகின் பிரபலங்களுக்கு நம் மனதில் நாம் எத்தகைய இடம் கொடுத்திருக்கிறோம்? இறைவனுக்கு ஒதுக்குகிற நேரத்தைவிட அதிகமான நேரத்தை இவர்களுக்கு ஒதுக்குகிறோம் என்பது நம்மை அதிர வைக்கும் உண்மை. ஆனால் அதே சமயம் நாம் உணர்ந்திராத உண்மை.

“கைபேசிகளை வைத்துக்கொண்டு என்னால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். என்னால் இந்த சின்ன கைபேசியை வைத்துச் செய்ய முடியாததே இல்லை” என்று சொல்வதும் எல்லாவல்ல இறைவனுக்கு இணையாக, பதிலியாக கைபேசியை உயர்த்துகிறோம் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு. இன்னும் சில சமயங்களில் நாம் செய்கிற பணியை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திப்பிடிப்பதும் சிலைவழிபாட்டிற்கு ஒப்பான செயலாகும். நம்முடைய திறமைகளையும், நம்முடைய சாதனைகளையும் சில சமயங்களில் நம்மையே இறைவனுக்கு இணையாக, இறைவனுக்கும் மேலாக நாம் உயர்த்திப் பார்க்கிறோம், பேசுகிறோம். இவையனைத்தையும் கொடுத்தவர் அவரல்லவா? அவர் கொடுத்தவை எப்படி அவருக்கு மேலாக முடியும்? சில சமயங்களில், நாம் நம்மைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறோம். ஆனால் நாம் நினைப்பது போன்று அல்ல. மாறாக அதைவிடக் குறைந்தவர்கள் என்பதை நம்முடைய வாழ்க்கை மற்றும் செயல்களை உற்றுப்பார்க்கும் போது நாம் அறிந்து கொள்ள முடியும்.

எனவே, அன்பார்ந்தவர்களே! இறைவன் நமக்குக் கொடுத்த இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் பயன்படுத்துவோம். ஆனால் அவைதான் எல்லாமே என அவற்றிலே விழுந்து கிடப்பது தவறு. தேவைக்குப் பயன்படுத்துவோம். அளவுக்குப் பயன்படுத்துவோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.








All the contents on this site are copyrighted ©.