2012-04-09 14:21:41

வாரம் ஓர் அலசல் – விழுவதற்கு அழத்தேவையில்லை


ஏப்.09,2012. Viktor Frankl என்பவர் 1942 க்கும் 1945 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு விதமான நாத்சி சித்ரவதை முகாம்களில் வாழ்ந்தவர். இனிமேல் வரலாற்றில் இத்தகைய கொடுமைகள் இடம் பெறவே கூடாது என்று உலகம் விரும்பும் அளவுக்கு, ஹிட்லரின் அந்த வதைப்போர் முகாம்கள் இருந்தன. அந்த முகாம்களில் Viktor Frankl அனுபவித்த துன்பங்கள் மிகவும் கசப்பானவை, மிகவும் கொடூரமானவை. அவரோடு இருந்த ஒவ்வொருவரும் துன்பங்கள் அனுபவித்து இறந்ததைக் கண்ணெதிரே கண்டார். அந்த முகாம் அனுபவங்களை, Man’s Search for Meaning - மனிதர் வாழ்வதற்கான அர்த்தத்தைத் தேடுவது பற்றிய நூலாக 1946ம் ஆண்டில் எழுதினார். மலையளவு துன்பங்களுக்கு மத்தியிலும் மனிதர் ஏன் வாழத் துடிக்கின்றனர் என்பதை Viktor Frankl இந்நூலில் விளக்கியிருக்கிறார். ஒருநாள் ஆஷ்விஷ் முகாமில், அதிகாரிகளின் கடுங்காவலில் வேலைக்கு அணிவகுத்துச் சென்ற போது ஒருவர் இவரது காதருகே சொன்னாராம் : “இந்நிலையை எனது மனைவி பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்” என்று. “எனக்காக எனது மனைவியும் பிள்ளைகளும் காத்துக் கொண்டிருப்பார்கள்”; “நான் பிடிக்கப்பட்டு இங்கு வரும் போது எனது மகள் பிறந்திருந்தாள், அவளைப் பார்க்க வேண்டும்”; நான் கைநிறைய சம்பாதித்து செல்வந்தனாக வேண்டும்; நான் நிறையப் படித்து அறிவாளியாக வேண்டும்; எனக்கென இறைவன் அமைத்துள்ள வாழ்வை வாழ வேண்டும்”... என ஒவ்வொரு கைதியும் தான் வாழ விரும்புவதற்கு காரணங்களை வைத்திருந்ததாக எழுதியிருக்கிறார். Frankl சொல்கிறார் : “நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வாழ்வின் அர்த்தம் காணப்படுகின்றது. துன்பம், மரணம் ஆகிய இவற்றிலும்கூட வாழ்வதற்குப் பொருள் இருக்கின்றது. ஒரு கைதி தனது எதிர்காலத்தின்மீது வைத்துள்ள உறுதியான பற்றுறுதியில் வாழ்வதற்குப் பொருள் இருக்கின்றது. இந்தப் பற்றுறுதியை இழக்கும் கைதி இருளடைந்து போகிறார். விரைவில் இறந்து விடுகிறார்” என்று. 1944ம் ஆண்டு கிறிஸ்மஸ்க்கும் 1945ம் ஆண்டு புத்தாண்டுக்கும் இடைப்பட்ட நாள்களில் கைதிகளின் இறப்புக்கள் அதிகம் இருந்தன, ஏனெனில் எப்படியாவது இந்த நாள்களுக்குள் விடுதலை செய்யப்படுவோம் என்று இவர்கள் நம்பியிருந்தார்கள், ஆனால் அது நடக்காது என்று தெரிந்தவுடன் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகனும், ஆயுள் தண்டனை பெற்ற இவரது மனைவி நளினியும் வேலூர் மத்திய சிறையில் இச்சனிக்கிழமை சந்தித்து, மருத்துவம் படிக்கும் தங்களது மகள் ஹரித்திரா பற்றிக் கண்ணீர் மல்கப் பேசியதாக ஊடகத்தில் வாசித்தோம். இவர்கள் வாழ விரும்புவதற்கும் அர்த்தம் இருக்கிறது.
அன்பு நேயர்களே, மனித வாழ்விலிருந்து துன்பத்தைப் பிரிக்க முடியாது. ஆனால் துன்பங்கள் ஒருவரைத் துணிவுள்ளவராக, மாண்புள்ளவராக, மதிப்புமிக்கவராக, தன்னலமற்றவராக மாற்றும். அதேசமயம் அவை மனித மாண்பை மறந்து விலங்கைவிட கேவலமானவராக மாறும் நிலைக்கும் மனிதரைக் கொண்டு செலுத்தும். மாண்பு மிக்கவராகவோ அல்லது மாண்பு இழந்தவராகவோ மாறுவது அவரவர் மனநிலையைப் பொருத்தது. ஒருவர் வாழ்க்கையில், ஏன் மிகவும் கடினமான சூழல்களிலும்கூட எதிர்கொள்ளும் துன்பங்களை அவர் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதைப் பொருத்து அவை அவரது வாழ்க்கைக்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. ஆயினும் ஒரு சிலரே, துன்பங்களின் வழியாக உயரிய நிலையை அடைகின்றனர். இவ்வுலகக் கண்ணோட்டத்தின்படி அவர்களுக்கு அத்துன்பங்கள் தோல்வியை அல்லது மரணத்தைக்கூட அளிக்கலாம். ஆயினும் அவர்கள் தங்களது சோதனைத் துன்பங்களைச் சாதனையாக்கிக் கொள்கிறார்கள். துன்பங்களை அரைமனதோடு ஏற்றுக் கொள்கிறவர்கள், இதைவிட மேலாக கடுந்துன்பங்கள் ஏற்படும் என்று எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பார்களாம். கைதிகள் தங்களது தண்டனைகாலம் முடியப் போகும் நிலையில்கூட இவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பார்களாம், இவர்கள், இந்த வாழ்வுக்குப் பின்னர் இருக்கும் வாய்ப்புக்களை மறந்து போகிறார்கள் என்று ஓர் எழுத்தாளர் சொல்கிறார். எனவே வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்குத் துன்பத்தின் மதிப்பை உணர வேண்டும்.
அவரவர் துன்பத்தை அவரவர்தான் அனுபவிக்க வேண்டும். வேறு யாரும் அவரது இடத்தில் இருந்து கொண்டு துன்பப்பட முடியாது. இத்துன்பம் எனக்கு ஏன் என்று கேட்பதை விடுத்து இதை எவ்வாறு ஏற்க முடியும் என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில், துன்பம் எனக்கு ஏன் என்ற கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தருவது கடினம். ஆயினும் கடினமான நேரங்களில் இறைவன், நண்பர், மனைவி, கணவர் அல்லது வேறு யாராவது உடன் இருக்க முடியும். ஆயினும் அதனை அனுபவிப்பவர் அவராகத்தான் இருக்க முடியும். ஒருமுறை ஒரு வயதான பெரிய மருத்துவரின் அன்பு மனைவி இறந்து விட்டார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரால் அந்த இழப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. மிகுந்த மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த அவர் Viktor Franklடம் சென்று தனது நிலையை விளக்கியிருக்கிறார். அப்போது ஃபிராங்கிள் அந்த மருத்துவரிடம், “நீங்கள் இறந்து உங்களது அன்பு மனைவி உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்டதற்கு, ஐயோ அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எனது மனைவி மிகவும் வேதனைப்பட்டிருப்பார் என்றாராம். அப்படியானால் உங்களது மனைவி வேதனப்படுவதற்குப் பதிலாக நீங்கள் வேதனைப்படுகிறீர்கள்” என்று சொன்னாராம். அதைக் கேட்ட அந்த மருத்துவர் மௌனமாக அங்கிருந்து சென்றாராம். ஆம். துன்பப்படுவதிலும் அர்த்தம் இருக்கின்றது. அது தியாகத்தின் பொருளை உணர்த்துகின்றது. உண்மையான அன்பினால் மட்டுமே ஒருவர் ஒருவரின் உள்ளுணர்வுகளை உணர முடியும். திருவள்ளுவரும், “தீயில் காய்ச்சி உருக்கிய தங்கம் எப்படி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறதோ அதுபோல, துன்பங்கள் நம்மை வருத்தும் போது அதைப் பொறுத்துக் கொள்பவர்கள் யாரோ அவர்களின் வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்” என்று சொன்னார்.
மனிதர் பொதுவாக எந்த நோக்கமுமின்றி வாழ்வதில்லை. தனது வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்துத்தான் வாழ்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மூன்றாமாண்டு இ.சி.இ. படித்துவந்த மணிவண்ணன் என்ற மாணவர், கடந்த மார்ச் 27ம் நாளன்று தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. மூன்றாம் வகுப்பைக்கூட தாண்டாத சூழலில் குழந்தைத் தொழிலாளராகியிருக்கிறார் மணிவண்ணன். 2000மாம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்தார். மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் 1159 மதிப்பெண்கள் எடுத்த மணிவண்ணன், தானும் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்தவர். மணிவண்ணனுக்கு சமூகம் மீது அதீத அக்கறையும், ஆர்வமும் இருந்திருக்கிறது. தான் வாழ்ந்து முடிப்பதற்குள் மூவாயிரம் குழந்தைகளையாவது தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும். என்னை மாதிரி யாரும் குழந்தைத் தொழிலாளராகக் கஷ்டப்படக் கூடாது என்று சொன்னவர். மூன்று வளர்ப்புக் குழந்தைகளைப் படிக்கவைக்கும் முதல் கல்லூரி இளைஞன் இவர். சமூக சேவகர். நல்ல உயரிய நோக்கத்தோடு வாழ்ந்த மணிவண்ணன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தமிழில் ஆர்வம் கொண்டிருந்த இவர், இந்தப் பொறியியல் படிப்பில் பின்னடைவு கண்டதால் மனம் சோர்ந்திருந்தார் என்று சக மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், தற்கொலை இதற்குத் தீர்வாகிவிடுமா?, வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே!.
வதை முகாம்களில் தற்கொலை முயற்சிகளில் தோல்வி கண்ட பலர், அதற்குப் பின்னர் பல வாரங்கள், மாதங்கள், ஏன் ஓராண்டு கழிந்த பின்னரும்கூட அந்தத் தோல்வியை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததை அவர்கள் தன்னிடம் கூறியதாக விக்டர் ஃபிராங்கிள் எழுதியிருக்கிறார். தங்களது பிரச்சனைக்குத் தீர்வு இருப்பதாகவும், தங்களது கேள்விக்குப் பதில் இருப்பதாகவும், தங்களது வாழ்வுக்கு அர்த்தம் இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர்கள் கூறியதாகவும் ஃபிராங்கிள் கூறியிருக்கிறார். முன்னாள் யூகோஸ்லாவியா நாட்டைச் சேர்ந்த போஸ்சினியா-எர்செகோவினா தனிநாடு கேட்ட போது, தலைநகர் Sarajevo வில் போர் வெடித்தது. அதில் சுமார் 2 இலட்சம் பேர் இறந்தனர். சுமார் 27 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் இடம் பெற்ற மிகப்பெரும் புலப்பெயர்வு இது என்று ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வன்முறையின் இருபதாவது ஆண்டு இந்த ஏப்ரல் 6ம் தேதி நினைவுகூரப்பட்ட RealAudioMP3 து. 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 7ம் தேதி ஆப்ரிக்காவின் ருவாண்டாவில் ஏற்பட்ட டுட்டு, ஹூட்சி இனங்களுக்கு இடையே இடம் பெற்ற மோதல்களில் 5 இலட்சம் பேர் முதல் 10 இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். இன்று அந்நாட்டில் இவ்வினங்கள் அருகருகே வாழும் ஒப்புரவு கிராமம் உருவாக்கப்பட்டு வருங்காலத் தலைமுறைகளுக்கு நல்லிணக்க வாழ்வும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. RealAudioMP3
அன்பர்களே, போர்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் துன்பத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துள்ளார்கள். இந்தப் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாட்டில் மறையுரை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நமது துன்ப சோதனை நேரங்களில் நாம் தனியாக இல்லை, இயேசு தமது அன்புடன் நம்மோடு இருக்கிறார், துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கான அருளை அவர் தருகிறார், சிலுவையில் அறையுண்ட அந்தக் கிறிஸ்துவில் மரணம் புதுப் பொருளையும் புது நோக்கத்தையும் பெறுகின்றது என்று கூறினார். கிறிஸ்துவின் உயிர்ப்பு அவரது சிலுவைத் துன்பத்துக்குப் பதில் சொல்லியிருக்கிறது. நமது வாழ்க்கைத் துன்பங்களுக்கும் பதில் சொல்கிறது. RealAudioMP3
இலையுதிர் காலத்தில் மரம் மொட்டையாக நின்றது. புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின. “உன் இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. உன்னைப் பார்த்தால் அழ வேண்டும் போல் இருக்கிறது...” என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது. அதற்கு மரம், “நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்” என்று சொல்லி நிமிர்ந்தே நின்றது. மீண்டும் மரம் சொன்னது “விழுவதற்கெல்லாம் அழுவதற்கில்லை” என்று.
அன்பு நெஞ்சங்களே, துன்பங்கள் இலையுதிர்க்கால மரம் போன்றவை. நாம் புது வாழ்வும் புத்துணர்ச்சியும் பெற உதவுபவை துன்பங்கள். எனவே விழுவதற்கெல்லாம் அழாமல் மரம் போன்று நிமிர்ந்தே நி்ற்போம். அந்த வாழ்க்கையில் புது அர்த்தம் இருக்கும். சாவை வென்ற இயேசுவும் என்றும் நம்மோடு.....








All the contents on this site are copyrighted ©.