2012-04-09 15:10:09

செல்வச்செழிப்பு மனிதர்களிடையில் பிளவுகளை அதிகரித்து வருகிறது - தென் கொரிய ஆயர்கள்


ஏப்ரல்,09,2012. தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவு செல்வம் வளர்ந்து விட்டபோதிலும், இந்தச் செல்வச்செழிப்பு மனிதர்களிடையிலும், மனிதர்கள் இயற்கையுடன் கொள்ளவேண்டிய உறவிலும் பிளவுகளை அதிகரித்து வருகிறது என்று தென் கொரியாவைச் சேர்ந்த ஆயர்கள் கூறியுள்ளனர்.
இறந்தோரிடமிருந்து உயிர்த்த இயேசுவே இவ்வுலகிற்கு நாம் வழங்கக்கூடிய மிகப் பெரும் கொடை என்று கூறும் ஆயர்களின் பாஸ்காச் செய்தி, உயிர்ப்புப் பெருவிழா, மனிதர்கள் மத்தியிலும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
செல்வச்செழிப்பில் வளர்ந்து வரும் மனித சமுதாயம், அதே வேளையில், தன்னலத்திலும் வளர்ந்து வருவது சமுதாயத்தின் இருள் நிறைந்த ஒரு பகுதி என்பதை எடுத்துரைக்கும் ஆயர்கள், செல்வச்செழிப்பும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்து பிரித்து, பகைமையை வளர்ப்பது குறித்து தங்கள் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
ஆயர்களின் இச்செய்தியை வெளியிட்ட Seoul உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Nicholas Cheong Jin-suk, ஏப்ரல் 11, இப்புதனன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.