2012-04-09 15:09:49

கத்தோலிக்கர்கள் சிலுவை அடையாளத்தை வெளிப்படையாக அணிய வேண்டும் - கர்தினால் Keith O’Brien


ஏப்ரல்,09,2012. நமது வாழ்வில் சிலுவை பெறவேண்டிய முக்கியமான ஓரிடத்தை உயிர்ப்புப் பெருவிழா நினைவுறுத்துகிறது என்று ஸ்காட்லாந்து பேராயர் கர்தினால் Keith O’Brien கூறினார்.
ஸ்காட்லாந்தின் Edinburgh அன்னைமரியா பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் O’Brien, கத்தோலிக்கர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அடையாளமாக சிலுவையைக் கருத வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாய் இருந்த சிலுவையை ஒரு துயர அடையாளமாகக் கருதுவதற்குப் பதிலாக, மீட்பின் ஒரு வழியாக இதைக் காணவேண்டும் என்று கர்தினால் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
சிலுவை அடையாளத்துடன் திருமுழுக்கு பெறும் அனைத்து கத்தோலிக்கர்களும் தங்கள் வாழ்வு முழுவதும் அந்த அடையாளத்தை வெளிப்படையாக அணிவதன் மூலம் கிறிஸ்துவின் சீடர்கள் என்று உலகறியச் செய்ய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் கர்தினால் O’Brien.
அண்மையில் பிரித்தானியாவில் சிலுவையை வெளிப்படையாக அணிவதுபற்றிய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள வேளையில், கர்தினால் Keith O’Brien தன் செய்தியின் வழியாக சிலுவையின் முக்கியத்துவத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.