2012-04-07 10:58:51

புனித வெள்ளியன்று உரோம் நகரில் நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் திருத்தந்தை வழங்கிய முடிவுரை


ஏப்ரல்,07,2012. பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும் குடும்பங்களுக்கு சிலுவையில் அறையுண்ட இயேசு துணை அளிக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவதுபோல், இவ்வாண்டும் புனித வெள்ளியன்று உரோம் நகரில் உள்ள Colosseum திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இயேசுவின் சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் திருத்தந்தை வழங்கிய முடிவுரையில் இவ்வாறு கூறினார்.
உறவுகளில் உருவாகும் முறிவுகள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை, குடும்பங்களில் நோயுற்றோர் என்ற பல கவலைகளில் சூழப்படும் குடும்பங்கள், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரச் சரிவு, நிலையான பணிவாய்ப்புகள் இல்லாத நிலை என்ற கூடுதல் பிரச்சனைகளையும் சந்தித்து வருவதை திருத்தந்தை தன் உரையில் சிறப்பான முறையில் குறிப்பிட்டார்.
நம்மைச் சூழும் பிரச்சனைகளில் நாம் தனித்து விடப்படுவதில்லை, மாறாக, சிலுவையில் அறையுண்ட இயேசு நம்முடன் துணை வருகிறார், அவர் துன்பங்களைத் தாங்கிய பாங்கு நமக்கு மன உறுதியை அளிக்கிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
குடும்பங்கள் என்ற மையப்பொருளில் உருவாக்கப்பட்ட இந்த ஆண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை முதல் முறையாக ஒரு இத்தாலியத் தம்பதியர் உருவாக்கியிருந்தனர். பல ஆண்டுகள் மணவாழ்வை நிறைவு செய்துள்ள Danilo Zanzucchiம் அவரது துணைவியார் Anna Mariaவும் Focolare இயக்கத்தின் அங்கத்தினர்கள் மட்டுமல்ல, 'புதிய குடும்பங்கள்' என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தவர்கள்.
உரோம் நகரின் புகழ்பெற்ற Colosseum திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த சிலுவைப்பாதையில், கர்தினால் Agostino Vallini, புனித பூமியில் பணி புரியும் புனித பிரான்சிஸ் துறவுச்சபையைச் சார்ந்த இருவர், மற்றும் இத்தாலி, அயர்லாந்து, ஆப்ரிக்கா, இலத்தீன் அமேரிக்கா நாடுகளில் இருந்து வந்திருந்த குடும்பத்தினர் சிலுவையைத் தாங்கிச் சென்றனர்.
புனித வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னின்று நடத்திய இந்தச் சிலுவைப்பாதை, தொலைகாட்சி மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.