2012-04-06 14:13:06

வாருங்கள், போவோம் கல்லறைக்கு...


RealAudioMP3 ஒவ்வொரு கல்லறைக்கும் ஒரு கதை உண்டு. நாம் இன்று இயேசுவின் கல்லறைக்கு வந்திருக்கிறோம். இந்தக் கல்லறை சொல்லும் கதை ஒரு வரலாறாக இருபது நூற்றாண்டுகள் வாழ்ந்து வருகின்றது. இந்தக் கல்லறைக்கு அருகில்கூடச் செல்லமுடியாத ஒரு நிலை. கல்லறையைச் சுற்றி நிற்கும் காவல் வீரர்கள் நம்மை நெருங்கவிட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து இறந்த ஒருவரது கல்லறைக்குக் காவல் வைக்கப்பட்டது இங்கு மட்டுமே நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லை... இல்லை... எகிப்து மன்னர்கள் இறந்த கல்லறைகளுக்கும் காவல்கள் வைக்கப்பட்டனவே என்று ஒரு சிலர் சொல்லலாம். அந்தப் பிரமிடு கல்லறைகளில் புதைக்கப்பட்ட மன்னர்களுடன் பல விலையுயர்ந்த பொருட்கள் புதைக்கப்பட்டதால் அங்கும் காவல் வைக்கப்பட்டது. காவல் என்று சொல்வதை விட, அந்தக் கல்லறைகள் கட்டப்பட்ட வடிவிலேயே பல பாதுகாப்பு நுணுக்கங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்தக் கல்லறைக்குள் சென்று பொருட்களைத் திருடிவரலாம் என்று ஆசைப்பட்டவர்கள் அனைவரும் கல்லறைகளை விட்டு வெளிவர முடியாமல், அங்கேயே உயிருடன் புதைக்கப்பட்டனர். அப்படி அந்தக் கல்லறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
எகிப்து மன்னர்களின் கல்லறையில் விலையுயர்ந்த பொருட்கள் இருந்ததால், இத்தகையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தன, சரிதான். இயேசுவின் கல்லறைக்கு காவல் ஏன்? மத்தேயு நற்செய்தி மட்டும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறது. 'கல்லறைக்குக் காவல்' என்ற தலைப்பில் அங்கு கூறப்பட்டுள்ள விவரங்கள் இதோ:

மத்தேயு நற்செய்தி 27 : 62-66
மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

இயேசுவின் கல்லறைக்குள் வேறு எந்த விலையுயர்ந்த பொருளும் புதைக்கப்படவில்லை... அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டவரே விலைமதிக்க முடியாத ஒரு கருவூலம். கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த உண்மை தெரியும். ஆனால், இந்த உண்மையை உலகிற்கு முதல் முறையாகப் பறைசாற்றியவர்கள் யார் தெரியுமா? கிறிஸ்துவின் மீது நம்பிக்கை ஏதும் இல்லாத யூத மதத் தலைவர்கள். எருசலேம் கோவிலைக் காத்துவந்த வீரர்களை இயேசுவின் கல்லறையைக் காவல் காக்க அனுப்பியதன் மூலம் இந்த மதக் குருக்கள் உலகிற்குச் சொல்லாமல் சொன்ன உண்மை இதுதான்: இங்கு புதைக்கப்பட்டிருப்பவர் சாதாரண மனிதர் அல்ல... விலைமதிப்பே இல்லாத ஒரு கருவூலம்.

எருசலேம் கோவிலில் விலையுயர்ந்த பொருட்கள் இருந்ததால், அங்கு இரவும் பகலும் வீரர்கள் பாதுகாப்பு தந்தனர். இன்று அந்தக் காவல் வீரர்கள் கோவில் காவலை விட்டுவிட்டு, ஒரு கல்லறைக்குக் காவல் இருக்கின்றனர். எருசலேம் கோவில் இடம் மாறி விட்டதோ? அப்படித்தான் தோன்றுகிறது. இதைத்தான் இயேசுவே முன்பு ஒருமுறைச் சொன்னார். அவர் எருசலேம் கோவிலைத் தூய்மை செய்தபோது, "எந்த அதிகாரத்தில் இதை நீர் செய்கிறீர்?" என்று மதத் தலைவர்கள் கேட்டனர். அதற்கு இயேசு சொன்ன பதில் இப்போது நினைவுக்கு வருகிறது. "இந்தக் கோவிலை இடித்து விடுங்கள்... மீண்டும் மூன்று நாட்களில் இதை நான் கட்டி எழுப்புவேன்." என்று இயேசு கூறினார். அந்தக் கூற்றின் முதல் பகுதி இங்கு நிறைவேறியதைப் போல் தோன்றுகிறது. இயேசு என்ற கோவிலை இடித்து விட்டனர். பின்னர், கோவில் காவல் வீரர்களே இடிக்கப்பட்ட அந்தக் கோவிலுக்குக் காவல் இருந்தனர். ஒவ்வொரு கல்லறைக்கும் கதைகள் பல உண்டு என்று சொன்னோம். இந்தக் கல்லறையின் கதை ஒரு வரலாறாக இருபது நூற்றாண்டுகள் முடிந்தபின்னும் தொடர்கிறது. இந்தக் கல்லறையின் கதையை இன்று தியானிக்க முயல்வோம்.

காவல் பலமாக இருந்த கல்லறையை நெருங்க முடியாமல் தவித்த அன்னை மரியா, மகதலா மரியா, அன்புச் சீடர்கள், ஆகியோருடன் இணைந்து நாம் இந்த தியானத்தை மேற்கொள்ள முயல்வோம். அந்தக் கல்லறையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அன்னை மரியா, சீடர்கள் அனைவரின் உள்ளங்களிலும் அலைமோதும் எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? எத்தனையோ எண்ணங்கள் இருந்தாலும், இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன பொன்மொழிகள் அவர்கள் எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுடன் நாமும் இணைந்து, இயேசுவின் இறுதி பொன்மொழிகள் இரண்டை மட்டும் சிந்திப்போம். தன் உலக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தன் சொல்லாலும் செயலாலும் இறைமகன் இயேசு மன்னிப்பின் உன்னதத்தை உணர்த்தியதை இங்கு சிந்திப்போம்.

இறக்கும் நிலையில் இருக்கும் யாரும் எதையாவது சொல்ல முயன்றால், அவர்கள் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப்படுகிறார் என்று தெரிந்தால், அந்த நேரத்தில் தன் வேதனையையும் பொறுத்துக்கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள் இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில் அந்த சிலுவையில் அற்புதமான வார்த்தைகளை, அழகான வாழ்க்கைப் பாடங்களைச் சொன்னார்.

இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். உரோமையர்கள் கண்டு பிடித்த சித்திரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக அவர்கள் கண்டுபிடித்தது சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்திரவதைப்பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு ஆணிகளால் அறையப்பட்ட கால்களையும், இரு கைகளையும் அவர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. இப்படி அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரணவேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரணஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரணஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே அவர்கள் மீண்டும் மேலே எழுந்துவர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இந்த மரணஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளிவரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த மற்றவர்களை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை."

தன் இறுதி மூச்சுவரை இயேசு மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல், கோடிக்கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். மனித வரலாற்றில் புனிதர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் மன்னிப்பிற்கு அற்புதமான சாட்சி பகர்ந்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் நாட்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம். நாட்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் காணப்பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும்.

இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். நாங்களும், அவர்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.

மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பைப் பெறவும் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டால் இந்த மண்ணகம் விண்ணகமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் வாழ்வில் மன்னிப்பைத் தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றைச் இயேசுவின் கல்லறை முன்பு நினைவுபடுத்தி பார்ப்போம்.
அவ்வப்போது நடந்துவரும் இந்த அற்புதங்கள் தினம் தினம் நடந்தால்...
மன்னிப்பு மழையில் இந்த உலகம் நனைந்தால்...
சுவாசிப்பதைப் போல் மன்னிப்பதும் நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே மாறிவிட்டால்...
அழகான கனவுகள் என்று அவசரப்பட்டு சொல்லவேண்டாம். நாம் நினைத்தால் இந்தக் கனவுகளை நனவாக்க முடியும். இயேசுவின் கல்லறை சொல்லித்தரும் முதல் பாடம் இது.

“அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்” என்று புனித பிரான்சிஸ் அசிசியார் உருவாக்கிய அந்த அற்புத ஜெபத்தின் இறுதி வரிகளை இந்தக் கல்லறை முன்பு சொல்லி நாமும் அமைதியின், மன்னிப்பின் கருவிகளாய் மாற இறையருளை வேண்டுவோம்.
"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.
கொடுப்பதாலேயே பெறுகிறோம்.
இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."

---------------------------------

மன்னிப்பை வார்த்தைகளில் சொன்ன இறைமகன் இயேசு, சிலுவையில் மன்னிப்பைச் செயல்வடிவிலும் காட்டினார். அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கி, பேரின்ப வீட்டுக்கு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். குற்றவாளியிடம் இயேசு கூறிய பொன்மொழி இதுதான்:
நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

மரணம் நெருங்கி வருவதை உணரும் மனிதர்கள் என்ன பேசுவார்கள்? கட்டாயம் அந்த நேரத்தில் தேவையற்ற, சின்னச் சின்ன விஷயங்களைப் பேசமாட்டார்கள். மறு வாழ்வின் வாசலில் நிற்பவர்கள், தாங்கள் விட்டுப் போகும் வாழ்க்கையில் அறிந்த உண்மைகளை, தங்கள் வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை, இதுவரைச் சொல்லத் தயங்கிய உண்மைகளை, உணர்வுகளைச் சொல்ல முயற்சி செய்வார்கள். சிலுவை என்ற மரணப் படுக்கையில் இருந்த மூவர் பேசிக்கொண்டதை நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் கூறுகிறார்:

லூக்கா
23 : 39-43

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றுஎன்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்றார்.

இயேசு தன்னோடு அறையுண்டிருந்தவருக்கு கொடுத்த அந்த உறுதிமொழியில் மூன்று உறுதிமொழிகள் உள்ளன.
"நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்.
நீர் என்னோடு இருப்பீர்.
நீர் இன்றே இருப்பீர்."

முதல் உறுதிமொழி - பேரின்ப வீட்டில் இருப்பீர்: இயேசு விண்ணகத்தை ஒரு வீடு என்று. அதுவும் பேரின்ப வீடு என்று குறிப்பிடுகிறார். ‘விண்ணகம்’ என்ற வார்த்தையைவிட ‘வீடு’ என்ற சொல் மனதுக்கு நெருக்கமான, நிறைவான ஒரு சொல்லாய் ஒலிக்கிறது.
ஆங்கிலத்தில் வீட்டைக் குறிப்பதற்கு, House, Home என்ற இரு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். House என்பது செங்கல், இரும்பு இவைகளால் கட்டப்படுவது. Home என்பது மனங்களால், அன்பால் கட்டப்படுவது. ஆழமான அர்த்தம் தரும் ஒரு சொல். அதேபோல், நம் தமிழ் மரபிலும், வீடுபேறு என்று சொல்வது இந்த உலகத்தைக் கடந்து, ஒரு நிறைவான, நிலையான அமைதியை, அன்பை நாம் பெறுவதை உணர்த்தும் ஒரு சொல். வீடு என்பதை ஓர் இடம் என்று சொல்வதை விட ஒரு நிலை என்று சொல்வதே அதிகம் பொருந்தும். தன்னுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியைப் பார்த்து, “நீர் அலைந்து திரிந்தது போதும். வீட்டுக்கு வாரும்” என்பது தான் இயேசு கூறிய இந்த வார்த்தைகளில் இருந்த முதல் உறுதி.

இரண்டாவது உறுதிமொழி - நீர் என்னோடு இருப்பீர்: வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனால், அந்த வீட்டில் தனிமையில் வாடும்போது அது வீடாக இருக்காது, சிறையாக மாறிவிடும். தனியாக இருப்பதற்கும், தனிமையாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். ஆயிரம்பேர் கூடி, இசை, நடனம் என்று கொண்டாடும் நேரங்களிலும் தனிமையாய் இருக்க வாய்ப்புகள் உண்டு. நம் பெருநகரங்களில் இப்போது அதிகரித்து வரும் வாரஇறுதி வைபவங்கள், டிஸ்கோ நடனங்கள் நடக்கும் இடங்களுக்குப் போனால், காதைப் பிளக்கும் ஓசைகளின் நடுவில், அங்குள்ளவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில், உள்ளத்தைக் காட்டக்கூடிய இயந்திரத்தைக் கொண்டு அவர்கள் மனதைப் பார்த்தால் அங்குள்ளவர்களில் பலர் தனிமைச் சிறைகளில் சிக்கியிருப்பது தெரியும். தனிமையில் இருப்பது வெறும் சிறை அல்ல. அதுதான் நரகம்.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவர் பிறந்தது முதல் வாழ்க்கையின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டு, அன்பு, அரவணைப்பு, இவற்றை இழந்ததனால் குற்றவாளியாய் மாறியிருக்க வேண்டும். குற்றங்கள் புரிய ஆரம்பித்ததும், இன்னும் அவர் மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்திருக்க வேண்டும். "நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று அவர் சிலுவையில் சொன்ன போது, தன் குற்றங்களை, தன் தனிமை உணர்வுகளை இயேசுவின் பாதங்களில் கொட்டுகிறார். அன்புக்கு, அரவணைப்புக்குக் காத்திருக்கும் அந்தக் குழந்தையின் மனதை புரிந்து கொண்ட இயேசு, அவரை உடலால் அரவணைக்க முடியவில்லையெனினும் உள்ளத்தால் அரவணைத்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் உறுதி மொழிகள் தான் “நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற சொற்கள்.
இயேசு மனு உரு எடுத்ததன் மையமே "கடவுள் நம்மோடு" என்பதை உணர்த்தத்தானே. தான் ஓர் ‘எம்மானுவேல்’ என்ற உண்மையை, இயேசு தான் பிறந்தபோது மாட்டுத் தொழுவத்தில் உணர்த்தியதுபோல், இறந்தபோது சிலுவையிலும் உணர்த்தியது அழகான ஓர் இறை வெளிப்பாடு.

மூன்றாவது உறுதிமொழி - இன்றே இருப்பீர். அன்பர்களே, இயேசுவின் உறுதி மொழியில் இப்பகுதியைப் புரிந்து கொள்வது கடினம். இயேசு சிலுவையில் அந்த குற்றவாளியைப் பார்த்து சொன்ன அந்த வார்த்தைகளில் நிபந்தனை ஏதும் இல்லாத இயேசுவின் மன்னிப்பை உணரலாம்.
“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று சொன்ன அந்த மனிதரைப் பார்த்து இயேசு நிபந்தனைகளோடு பேசியிருந்தால், இப்படி பேசியிருக்க வேண்டும்: “நீயா? இத்தனைக் குற்றங்கள் செய்தவனா? விண்ணகத்திலா? ம்... பார்ப்போம். ஒரு சில ஆண்டுகள் உன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டு, பிறகு வா. அப்போது உன்னை விண்ணகத்தில் சேர்க்க முடியுமா என்று பார்ப்போம்.” இப்படிப்பட்ட வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இயேசு சொன்னது “இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற உறுதி மட்டுமே. பேதுருவின் இரண்டாம் திருமுகத்தில் நாம் காணும் வரிகள் இயேசுவின் "இன்றே" என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள உதவும்.

பேதுரு இரண்டாம் திருமுகம் 3: 8
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.

காலம் என்பது மனிதர்களாகிய நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அளவு. நொடி, நிமிடம் என்று ஆரம்பித்து ஆயிரம் வருடங்கள் கோடான கோடி வருடங்கள் என்று நாம் எண்ணிக்கொண்டே இருக்கலாம். நேற்று, இன்று, நாளை, என்று பல பாகுபாடுகள் செய்து கொள்ளலாம். இறைவனுக்கு இவைகள் கிடையாது. அவருக்கு எப்போதும் இன்றே... இப்போதே... இறைவனைப் பொறுத்தவரை அனைத்தும் நிகழ்காலம் மட்டுமே. மனித அறிவால் இதைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் நாம் அனைவரும் நாம் உருவாக்கிக்கொண்ட காலத்தின் கைதிகள்.

காலத்தின் கைதிகளாகிய நாம் அவ்வப்போது நேரத்தின் அளவை உணராமல் வாழ்ந்திருக்கிறோம். நம் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலில் ஈடுபடும் போது, உதாரணத்திற்கு, அழகான இசையில் முற்றிலும் நம்மை மறந்திருக்கும்போது, அல்லது நம் மனதிற்குப் பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது... ஆழ்நிலை தியானகளில் மூழ்கும்போது... இந்த நேரங்களில் நேரம்போனதே தெரியாமல் இருந்திருக்கிறோம் இல்லையா? நேரம் பற்றிய கவலையே இல்லாமல் நாம் வாழ்ந்த இந்த குறுகிய காலங்களை முழு வாழ்க்கையிலும் உணர்வதுதான் இறைவனுடன் நாம் இருக்கப் போகும் நேரம். அந்த அற்புத நிகழ்காலத்தை அந்த குற்றவாளிக்குத் தரும் வகையில் இயேசு அவரிடம் "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." என்று சொன்னார்.

இயேசு சிலுவையில் உதிர்த்த சில பொன்மொழிகளில் இவ்விரண்டிலும் மன்னிப்பு வெள்ளமாய்ப் பொங்கி வழிகிறது. தன்னை வதைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கச் சொல்லி தந்தையை மன்றாடினார். தன்னுடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியை நிபந்தனை ஏதும் இன்றி மன்னித்து அணைத்து பேரின்ப வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்தச் சொற்கள், நிகழ்வுகள் அன்னை மரியாவுக்கும், மற்ற சீடர்களுக்கும் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருக்கும். இதோ நாம் அமர்ந்திருக்கும் இந்தக் கல்லறையும் அதே மன்னிப்பை, அன்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தக் கல்லறை சொல்லும் கடவுளின் நிபந்தனையற்ற அன்பை நாமும் உணர்ந்து, அவரது பேரின்ப வீட்டில் நம்மையும் இயேசு இணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.