2012-04-04 15:03:23

நேபாளத்தில் உயிர்ப்பு விழா கொண்டாட்டம் முதல்முறையாக எவ்வித பயமும் இன்றி நடைபெறும்


ஏப்ரல்,04,2012. நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் புனித வாரச் சடங்குகளும், உயிர்ப்பு விழா கொண்டாட்டமும் முதல்முறையாக எவ்வித பயமும் இன்றி நடைபெற உள்ளதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
2006ம் ஆண்டு மத சார்பற்ற நாடாக நேபாளம் தன்னையே அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு மத வழிபாடுகளுக்கு உள்ள சுதந்திரம் வலுப்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அங்கு கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் விழாவில் இந்து அடிப்படைவாதக் குழுக்களின் பிரச்சனைகள் ஏதும் நிகழாத வண்ணம் பலத்தப் பாதுக்காப்பு கொடுக்கப்பட்டது. அதேபோல், உயிர்ப்புத் திருவிழாவையும் கொண்டாட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புனித வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக, காத்மண்டு நகரில் உள்ள விண்ணேற்பு பேராலயத்தில் புனிதப் பொருட்கள், மற்றும் ஓவியங்கள் அடங்கியக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேமாதம் 25ம் தேதி அந்நாட்டின் சட்டச் சீர்த்திருந்தங்கள் அமலுக்கு வரவிருக்கும் சூழலில், 20 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களைக் கொண்ட நேபாளத்தில், மத உரிமைகளை வலியுறுத்தி ஊர்வலங்கள் நடைபெற உள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.