2012-04-03 15:39:48

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 112


RealAudioMP3 நிற்பவனை
காலில் விழச் சொல்வதல்ல
ஆசிர்வாதம்.
சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தையைப் பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூரப் பணிவதும்
நலிந்து கிடப்பவனைத்
தூக்கி விடுவதுமே
மெய்யான ஆசீர்வாதம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு சாபம் என்பதைப் பற்றிச் சிந்தித்தோம். பிறரைச் சபிக்க வேண்டாம், மாறாக ஆசி அளிக்க வேண்டும் என்று சொன்னோம். இன்றைய விவிலியத்தேடலில் ஆசி என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.

அன்பார்ந்தவர்களே! ஆசி என்பது ஒருவர் மற்றவரை மகிழ்ச்சி, நிறைவு மற்றும் எல்லா வளங்களோடும் வாழ வாழ்த்துவது அல்லது விரும்புவது என்று சொல்லலாம். ஆசி என்பது இறைவன் மனிதருக்கு அளிப்பது என்பதே பொதுவான கருத்து. ஆனால் நம் சமுதாயத்திலுள்ள மற்றும் குடும்பத்திலுள்ள பெற்றோர்களும், பெரியோர்களும், அனுபவசாலிகளும் ஆசி வழங்கலாம், ஆசி வழங்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வருகிறது.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் நமது ஊர்களில் புது வருடத்தின் முதல் நாளில் பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சித்தப்பா என்று எல்லா உறவினர்களையும் தேடிச் சென்று ஆசி பெறுவதைக் கூறலாம். நமது பிள்ளைகள் உடல் நலத்தோடும், எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் என விரும்பி, இறைவனை மன்றாடி உறவினர்கள் ஆசி வழங்குவர். புத்தாண்டின் முதல் நாளில் பிள்ளைகளை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது என்று சொல்லி கைகளில் அவர்களால் முடிந்ததைக் கொடுத்து அனுப்புவார்கள். அது பணமாகவோ, துணியாகவோ அல்லது பரிசுப் பொருளாகவோ இருக்கலாம். பிள்ளைகள் எல்லா வளத்தோடும் வாழ வேண்டும் என்று விரும்புவதோடு பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்திசெய்யும் விதமாகவும் அவற்றைக் கொடுக்கிறார்கள். எனவே ஆசி என்பது பிறர் நன்றாக வாழ வேண்டும் என விரும்புவது மட்டுமல்ல. மாறாக முடிந்த அளவு நன்றாக வாழ வைப்பதுமாகும் என்பதுதான் இன்றைய சிந்தனையின் மையக்கருத்து.

நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 112. இத்திருப்பாடல் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் அவரால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர் என்று சொல்லி, ஆண்டவர் வழங்கிய ஆசிகளைப் பட்டியலிட்டு, ஆசி பெற்றோரின் செயல்பாடு பற்றிச் சொல்லி முடிகிறது. ஆண்டவர் வழங்கிய ஆசிகளை இத்திருப்பாடலின் முதற்பகுதியிலும், ஆசி பெற்றோரின் செயல்பாட்டை இரண்டாம் பகுதியிலும் ஆசிரியர் விவரிக்கின்றார். இதோ ஆண்டவர் வழங்கிய ஆசிகள்.
சொற்றொடர்கள் 37
சொத்தும், செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும், இரக்கமும், நீதியும் உள்ளோராய் இருப்பர்.
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

இச்சொற்றொடர்களைக் கேட்டதுமே என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்களின் முகங்கள் என் மனக்கண் முன் நிழலாடுகின்றன. சிலரைப் பார்த்து, அவர் நல்ல மனிதர். காசு பணத்திற்கு குறைவில்லை. நன்கு படித்திருக்கிறார். இன்று நேற்று அல்ல, அவர்களது தாத்தா காலத்திலிருந்தே அவர்களுக்குக் குறைவில்லை. இவரும் நன்கு படித்தார். படித்துமுடித்துவிட்டு இவருடைய அப்பாவிற்குப் பிறகு இவரே தொழிலைப் பார்க்க வந்துவிட்டார். கோயிலுக்கு எது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் உடனே செய்வார். காசு இருக்கிறதென்று யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். கொஞ்சம் கூட கர்வம் இல்லாதவர். குடும்பத்தாரும் மிக நல்லவர்கள். கடவுளுடைய ஆசீர் அக்குடும்பத்தில் இருக்கிறது. எனவே அக்குடும்பம் அவ்வாறு உள்ளது என்று சிலரைப் பற்றி அல்லது சில குடும்பங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாறு எழுந்த என் சிந்தனை ஓட்டத்தில், இறைவன் ஒரு சிலருக்கு மட்டும்தான் ஆசி வழங்குகிறாரா? எல்லாருக்கும் வழங்குவதில்லையா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தேட விவிலியத்தைப் புரட்டினேன். மத்தேயு 5:45 பதில் சொல்கிறது.
இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

இறைவன் எல்லாருக்கும் ஆசி வழங்குகிறார் என்ற பதிலோடு திருவிவிலியத்தில் யார் யாரெல்லாம் ஆசி பெற்ற மனிதர்கள் என சொல்லப்பட்ருக்கிறது என அறிய முற்பட்டபோது, நோவா, ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, மோசே என பட்டியல் நீண்டுகொண்டே போவதைக் கண்டேன்.
இறைவனின் ஆசி எல்லாருக்கும் உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் மேற்சொல்லப்பட்ட விவிலிய நாயகர்கள் ஏன் இறைஆசி பெற்றவர்கள் என சிறப்பாகக் கோடிட்டுக் காட்டப்படுகின்றனர் என்ற ஐயம் எழுகிறதல்லவா? இத்திருப்பாடலின் முதல் சொற்றொடர் இதற்கு பதில் சொல்கிறது.
அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

எல்லாருமே இறையாசி பெற்றாலும், எல்லாருமே ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில்லையே. எனவே இறைவன் தமக்கு அஞ்சி நடப்போரைத் தேர்ந்தெடுக்கிறார். இவ்வாறு தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இறைவன் ஆசி மட்டும் அளிக்கவில்லை மாறாக ஆசியோடு சேர்த்து, காலத்தின் தேவைக்கேற்ப தன் மீட்புப் பணியில் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையும் அளிக்கிறார். விவிலியத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள்.
தொடக்கநூல் 6 முதல் 10 வரையுள்ள பிரிவுகளை வாசிக்கும் போது, இறைவன் மண்ணுலகில் தீமை நிறைந்து விட்டதால், அதை அழித்துவிட முடிவு செய்கிறார். நோவா நேர்மையான மனிதர் என்பதால் அவரை மட்டும் தேர்ந்தெடுத்து, ஆசி அளித்து, “நீ ஒரு பெட்டகம் செய். அதில் நீயும் உன் குடும்பத்தாரும், உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஒரு ஜோடி எடுத்துக் கொண்டு நுழைந்துவிடுங்கள். நான் நீரால் இவ்வுலகை அழிக்கப்போகிறேன்” என்று சொன்னார். இவ்வாறு தன்னோடு சேர்ந்து இவ்வுலகைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட இறைவன் நோவாவைப் பணித்தார்.
இறைவன் ஆசியோடு சேர்த்து பொறுப்பையும் ஒப்படைக்கிறார் என்பதற்கு யோசேப்பு மற்றுமோர் உதாரணம். தொடக்க நூல் பிரிவுகள் 37 முதல் 40 முடிய வாசித்துப் பார்க்கும்போது, யாக்கோபின் பன்னிரு பிள்ளைகளில் இறைவன் யோசேப்பை ஆசிர்வதித்தார். அவர்களுக்கு முன்பாக அவரை எகிப்திற்கு அனுப்பினார். கனவை விளக்கும் அறிவைக் கொடுத்து, எகிப்து மன்னனின் நன்மதிப்பைப் பெறச்செய்தார். இவ்வாறு யோசேப்பை ஆசீர்வதித்த இறைவன் அவருடை தந்தை மற்றும் சகோதரர்களைக் காக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். பஞ்ச காலத்திலே சகோதரர்கள் வந்தபோது, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொடுத்து அனுப்பினார்.

புதிய ஏற்பாட்டிலே அன்னை மரியாள் பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தைப் பெற்றார். ஆனால் அந்த வாழ்த்திற்குப் பின் உலகை மீட்கப்போகும் இறைமகன் இயேசுவை வளர்த்தெடுக்கும் மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதை மறந்து விட முடியாது.
இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 112ன் இரண்டாம் பகுதியில், ஆசி பெற்றோரின் செயல்பாட்டை ஆசிரியர் அருமையாக விளக்குகிறார். சொற்றொடர் 9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.

அன்பார்ந்தவர்களே! ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபை மட்டும் இறைவன் ஆசீர்வதிக்கவில்லை. மாறாக நம் ஒவ்வொருவரையும் பல்வேறு விதங்களிலே ஆசிர்வதித்திருக்கிறார். இறைவன் நமக்கு ஆசியைத் தந்திருப்பது, அவற்றை வைத்து நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கல்ல. மாறாக அந்த ஆசியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம் என்பதற்காகவே. பெற்ற ஆசியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமையைப் பெற்றிருக்கிறோம்.
தாலந்து உவமையை எடுத்துக் கொள்வோம். 5 தாலந்து பெற்றவன் மேலும் 5 தாலந்து சம்பாதிக்கிறான். 3 தாலந்து பெற்றவன் மேலும் மூன்றைச் சம்பாதிக்கிறான். ஆனால் ஒரு தாலந்து பெற்றவனோ அதை மண்ணில் புதைத்து வைக்கிறான். எனவே அவன் வெளி இருளில் தள்ளப்படுகிறான். இறைவன் தாலந்தைக் கொடுத்து ஆசி அளிக்கிறார் என்றால், அத்தாலந்தை பலுகச் செய்யவேண்டும். அதுவே இறைவனின் விருப்பம். அதே போல இறைவன் அளிக்கின்ற ஆசிகளை நாமும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இறையாசி என்பதே பிறருக்காக செயலாற்ற நமக்கு கொடுக்கப்பட்ட கடமை, பொறுப்பு. இறை பராமரிப்புப் பணியிலே நாம் ஓர் அங்கம் வகிக்கிறோம் என்பதே மிகப்பெரிய ஆசி. இறையாசி பெற்ற நாம் அனைவரும், இறைவனின் ஆசியை பிறருக்கு அள்ளித்தரும் பாத்திரங்களாக மாற வேண்டும்.

இறுதியாக நாம் இறையாசியைப் பெற்று பிறரோடு பகிர்ந்து கொள்வதோடு நாமே பிறருக்கு ஆசியாக இருக்க வேண்டும். ஆசி அளிப்பது சரி. ஆனால் நாமே எப்படி ஆசியாக இருப்பது? தொடக்கநூல் 12:2
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
இறைவன் ஆபிரகாமைப் பார்த்து, “நான் உனக்கு ஆசி அளிக்கிறேன். எனவே நீ செல்வச் செழிப்போடு இரு. உனக்கு கீழ் இருக்கும் மக்களை ஆண்டு வழிநடத்து” என்று சொல்லவில்லை மாறாக “நீயே ஆசியாக விளங்குவாய்” என்று சொன்னார். இதன் பொருள் என்ன? இஸ்ரயேல் மக்களை இறைவனோடு இணைக்கும் இணைப்பாளராக ஒருவர் தேவைப்பட்டார். அவர்களைப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்ல ஒருவர் தேவைப்பட்டார். இதே ஆபிரகாம் இத்தேவைகளை நிறைவு செய்கிறார். இறைவன் ஆபிரகாமைப் பார்த்து, “உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு, செல். நான் உன்னைப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்வேன்” என வாக்களித்ததும், ஏன் என்று கேட்காமல் பயணத்தைத் துவங்கினார். இறைதிட்டத்திற்கு ஆம் என்று சொல்வதன் வாயிலாக அவரே ஆசியாக மாறினார். அவருடைய பிரசன்னமே இஸ்ரயேல் மக்களுக்கு ஆசியாக அமைந்தது. நாமும் ஆபிரகாமைப் போல பெற்றுக்கொண்ட இறையாசியைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம். நாமே இறையாசியாக மாறுவோம்.








All the contents on this site are copyrighted ©.