2012-04-03 15:46:19

நலவாழ்வு, வாழ்நாளை அதிகரிக்கிறது – பான் கி மூன்


ஏப்.03,2012. நலவாழ்வை ஊக்குவித்தல், ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலத்தோடு இருந்து, வயதான காலத்தில் ஆக்கப்பூர்வமானச் செயல்களைச் செய்ய உதவும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல் 7ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துல நலவாழ்வு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த நூற்றாண்டின் பாதியில், உலகில் எண்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் இருந்தனர், இதே வயதினர், 2050ம் ஆண்டுவாக்கில், ஏறத்தாழ 40 கோடியாக இருப்பார்கள், இவர்களில் சீனாவில் மட்டும் 10 கோடிப் பேர் இருப்பார்கள். மேலும், 65 வயதுடையவர்களை அல்லது 5 வயதுக்கு மேலானவர்களை இவ்வுலகம் வரலாற்றில் முதன் முறையாகக் கொண்டிருக்கும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
உலக மக்களின் வாழ்நாளில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களே காரணம் எனக் கூறும் அச்செய்தி, உலகில் எல்லா இடங்களில் வாழ்வோரும் நலமான வாழ்வுடன் முதிர்ந்த வயதை அடைய வாய்ப்புக்கள் வழங்கப்படுமாறு கேட்டுள்ளது.
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக நலவாழ்வு நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள், அனைத்துல நலவாழ்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.