2012-04-03 15:42:11

சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்குப் பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு திருப்பீடப் பிரதிநிதி வேண்டுகோள்


ஏப்.03,2012. சிரியாவில் பாகுபாடின்றி இடம் பெற்று வரும் தாக்குதல்களால் வன்முறைகள் அதிகரித்து வரும்வேளை, அந்நாட்டில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்குப் பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு அரபுக் கூட்டமைப்பு நாடுகளுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Michael Fitzgerald வேண்டுகோள் விடுத்தார்.
“சிரியா மக்களின் நண்பர்கள் அமைப்பு” என்ற, சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு முயற்சித்து வரும் நாடுகள் நடத்திய இரண்டாவது கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Fitzgerald, சிரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் தாக்குதல்களால் மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
சிரியாவில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்குத் திருத்தந்தை தொடர்ந்து விடுத்து வரும் அழைப்பு குறித்தும் குறிப்பிட்ட பேராயர், சிரியாவின் பல்வேறு உறுப்பினர்களின் நியாயமான ஏக்கங்கள் நிறைவேற்றப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, சிரியாவில் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இம்மாதம் 10ம் தேதிக்குள், இராணுவத் துருப்புக்களை அகற்றுவதாகவும், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வதாகவும் சிரியா அரசு உறுதி கூறியிருப்பதாக, ஐ.நா.தூதராக அந்நாட்டில் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.