2012-04-02 15:45:14

திருத்தந்தையின் விண்ணப்பத்தை ஏற்று, புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது கியூபா அரசு


ஏப்ரல்,02,2012. திருத்தந்தை தன் திருப்பயணத்தினபோது விடுத்திருந்த விண்ணப்பத்தை ஏற்று, இவ்வாரத்தின் புனித வெள்ளிக்கிழமையைத் தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது கியூபா அரசு.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கியூபா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட போது, இந்த மார்ச் மாதம் 27ம் தேதி, கடந்த செவ்வாயன்று அந்நாட்டு அரசுத்தலைவர் Raúl Castroவை, அவரது மாளிகையில் 40 நிமிடங்களுக்கு மேலாகத் தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, திருத்தந்தை புனித வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, இம்முடிவை தற்போது அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இயேசுவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் சிறப்பாகத் தியானிக்கும் புனித வெள்ளியன்று, கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இந்தச் சலுகையைக் கேட்பதாகத் திருத்தந்தை தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டின் புனித வெள்ளி தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், புனித வெள்ளியை நிரந்தரமாகத் தேசிய விடுமுறையாக்குவது குறித்து அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவில் 1959ம் ஆண்டில் கம்யூனிச ஆட்சி தொடங்கிய பின்னர், அந்நாட்டுப் புரட்சியாளர்கள் அனைத்துச் சமய விடுமுறைகளையும் இரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபா அரசு, இவ்வாண்டு புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்திருப்பது குறித்து திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். கியூபா அதிகாரிகள், திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வேண்டுகோளை இவ்வளவு விரைவாக நிறைவேற்றியிருப்பது “நிச்சயமாக, நல்ல நேர்மறையான அடையாளம்” என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.