2012-03-31 15:09:28

சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் டாலர் உதவி


மார்ச்31,2012. சிரியாவில் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே இடம் பெற்று வரும் கடும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஒரு இலட்சம் டாலரை வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று திருப்பீட Cor Unum அவை அறிவித்தது.
சிரியாவில், குறிப்பாக ஹோம்ஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை, காரித்தாஸ் பிறரன்பு நிறுவனம் வழியாகப் பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் வேளை, திருத்தந்தையும் அத்தலத்திருஅவையின் பணிகளுக்கென திருப்பீட Cor Unum பிறரன்பு அவை மூலம் ஒரு இலட்சம் டாலரை வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று அவ்வவை அறிவித்தது.
திருத்தந்தை வழங்கும் இந்நிதியுதவியை, திருப்பீட Cor Unum பிறரன்பு அவைச் செயலர் பேரட்திரு. Giampietro Dal Toso இச்சனிக்கிழமை சிரியா நாட்டுத் திருஅவையிடம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரியா நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் முதுபெரும் தலைவர் 3ம் கிரகோரியோஸ் லாகம்மையும் பிற தலத்திருஅவை அதிகாரிகளையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் வன்முறை முடிவுக்கு வரவும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சண்டையிடும் தரப்பினர் உரையாடல் மூலம் அமைதி மற்றும் ஒப்புரவுப் பாதையில் செல்லுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். துன்புறும் மக்களுக்காகச் செபிப்பதாகவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிரியாவின் துருப்புக்கள் நகரங்களைவிட்டுச் செல்ல வேண்டுமென, ஐ.நா. அமைதிப்பணிக்குழு வேண்டுகோள் விடுத்ததற்குப் பதில் அளித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர், சிரியாவில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படும் வரை, அந்நாட்டுத் துருப்புக்கள் நகரங்களின் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் என அறிவித்துள்ளார்.
சிரியாவில் ஏறக்குறைய ஓராண்டளவாக நடைபெற்று வரும் சண்டையில் குறைந்தது 9,000 பேர் இறந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.