2012-03-29 16:39:34

திருத்தந்தையின் 23வது வெளிநாட்டுத் திருப்பயண நிறைவு


மார்ச்29,2012. இம்மாதம் 23ம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை மெக்சிகோ மற்றும் கியூபாவுக்குத் தனது முதல் மேய்ப்புப்பணி திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதலில் மெக்சிகோவிலும் பின்னர் கியூபாவிலும் என ஆறு நாள்கள் பயண நிகழ்ச்சிகளை நிறைவு செய்து இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 10 மணி 45 நிமிடங்களுக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்தடைந்தார். கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவலிருந்து இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, ஆல் இத்தாலியா போயிங் 777 விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, 10 மணி 15 நிமிடங்கள் விமானப்பயணம் செய்து உரோம் வந்து சேர்ந்தார். இத்தாலிய உள்துறை அமைச்சர் Anna Maria Cancellieri உட்பட பல பிரமுகர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitanoவும், இத்திருப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ள திருத்தந்தைக்கு நல்வரவேற்பளிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார். திருத்தந்தை அந்நாட்டினருக்கு அளித்த சகோதரத்துவ உற்சாகம், அந்நாடுகள் மக்களாட்சிப் பாதையிலும், மனித விழுமியங்களிலும் மேலும் முன்னேற உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் Napolitano. திருத்தந்தையும், கியூபா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்குச் செபமும் வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளை அனுப்பியுள்ளார். இத்தாலியில் நல்அமைதியும் வளமையும் நிரம்பத் தான் செபிப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தையின் இந்தக் கியூபாத் திருப்பயணம், அம்மக்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாக, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
இப்புதன் காலை, இத்திருப்பயண நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, ஹவானா திருப்பீடத் தூதரகத்தில் கியூபாவின் முன்னாள் அரசுத்தலைவர் Fidel Castro, தனது மனைவி தாலியா மற்றும் இரண்டு மகள்களுடன் திருத்தந்தையைச் சந்தித்தார். திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே முதலில் அவரை வரவேற்று திருத்தந்தையிடம் அழைத்துச் சென்றார். கம்யூனிச கியூபாவை சுமார் 46 ஆண்டுகளாக ஆட்சி செய்த புரட்சிகரமான இரும்பு மனிதர் Fidel Castro, அருளாளர்கள் திருத்தந்தை 2ம் ஜான் பால், அன்னைதெரேசா ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். தற்போது வயதாலும் நோயாலும் தளர்ந்து போயுள்ள Fidel Castro, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் சந்திப்பதற்கு தனது இணையதளத்தில் மிகுந்த விருப்பம் தெரிவித்திருந்தார். பிறப்பிலும் வளர்ப்பிலும் கத்தோலிக்கரான Fidel Castro, திருத்தந்தையைச் சந்தித்தபோது, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்துக்குப் பின்னர் திருவழிபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குக் காரணங்கள், திருத்தந்தையின் பணி, இக்காலத்து மக்களில் எழும்பும் மெய்யியல் சார்ந்த கேள்விகள் குறித்த திருத்தந்தையின் சிந்தனைகள் போன்றவை குறித்துக் கேட்டு, தான் கேட்ட இக்கேள்விகள் குறித்த புத்தகங்களைத் தனக்கு அனுப்புமாறு திருத்தந்தையிடம் கேட்டதாகவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார். ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் இடம் பெற்ற இச்சந்திப்பில் ஃபிடெல் காஸ்ட்ரோ திருத்தந்தையிடம் கேட்ட கேள்விகளைப் பார்க்கும் போது அவர் தனது வாழ்வைச் சிந்திப்பதிலும் எழுதுவதிலும் செலவழிக்கிறார் என்று தெரிகிறது என்றார் அருள்தந்தை லொம்பார்தி.
இச்சந்திப்புக்குப் பின்னர், ஹவானா திருப்பீடத் தூதரகத்திலிருந்து, குண்டு துளைக்காத கண்ணாடியாலான காரில் அந்நகரின் புரட்சி வளாகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றுவதற்காகச் சென்றார். “Jose Marti” என்ற இப்புரட்சி வளாகம் சுமார் ஆறு இலட்சம் பேர் இருக்கக்கூடிய பெரிய இடமாகும். இது கியூபாவில் காலனி ஆதிக்கத்தை நடத்திய இஸ்பானியர்களுக்கு எதிராகவும், மற்றும் பல புரட்சிகள் இடம் பெற்ற வளாகமாகும். இலத்தீன் அமெரிக்காவின் நவீன கவிதைப் பள்ளியைத் தொடங்கியவர்களில் ஒருவராகப் போற்றப்படும் Jose Marti, ஒரு பத்தரிகையாளர், கவிஞர் மற்றும் இராணு வீரர். கியூபாவில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கெதிராய்ப் போராடியவர். அப்போரில் இவர் கொல்லப்பட்டவர். இவர் பெயரிலான இந்தப் புரட்சி வளாகத்திலுள்ள கட்டிடங்கள் கியூபப் புரட்சித் தலைவர்கள் Fidel Castro, Che Guevara ஆகியோரின் படங்களால் நிறைந்துள்ளன. இவ்வளாகத்தில் ஆறு இலட்சத்துக்கு அதிகமானோர் திருத்தந்தையின் திருப்பலியைக் காணக் காத்திருந்தனர். கியூபாவில் சுமார் 10 விழுக்காட்டினரே கத்தோலிக்கராய் இருந்தாலும், சமய பேதமின்றி அந்நாட்டினர் பலரும், இன்னும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும் மக்கள் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
எல் கோப்ரே பிறரன்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூபிலி ஆண்டில் உங்களோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்துவதில் மகிழ்கிறேன் என்று இத்திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை. அதில் மறையுரையாற்றிய திருத்தந்தை, கியூபாவில் இடம் பெற்று வரும் சமய சுதந்திரத்தைப் பாராட்டினார்.
திருப்பலியை முடித்து திருப்பீடத் தூதரகம் சென்றார். மாலையில் ஹவானானா விமான நிலையம் சென்று வழியனுப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். காற்றும் மழையுமாக இருந்ததால் இந்நிகழ்வு விமான நிலைய அறைக்குள் இடம் பெற்றது. முதலில் அரசுத்தலைவர் ரால் காஸ்ட்ரோ ஆற்றிய நன்றியுரையில், கியூப மக்கள் தங்களின் உரையை தாராள மனத்தோடும் கவனத்துடனும் செவிமடுத்தார்கள். இப்பயணத்தை என்றும் நினைவில் கொண்டிருப்போம் என்றார்.
திருத்தந்தையும் கியூபாவுக்கான இறுதி உரையை நிகழ்த்தினார். கியூபாவில் 99.8 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். ஹவானா “Jose Marti” பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் அவரது 23வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.